தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளான 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்களின் பஸ்சை போராட்டக்காரர்கள் எரித்தனர். இதில் 3 மாணவிகள் பலியானார்கள்.
இந்த வழக்கில் முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதையடுத்து குற்றவாளிகள் 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
அதில், ‘2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மரண தண்டனை குறித்து முடிவெடுக்க முடியாது. 5 பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். மறு ஆய்வு மனு மீது திறந்தவெளி விசாரணை மேற்கொள்ள வேண்டும், தங்களின் மரண தண்டனையை குறைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு மீது நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஏ.கே.சிக்ரி, தீபக்மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இருதரப்பு வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடும்போது, இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என்றும், கலவரத்தின்போது நடந்தது என்றும் கூறி, தங்கள் கட்சிக்காரர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அப்போது, குற்றவாளிகளான முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.
“உணர்ச்சி வசப்பட்டு செய்யப்பட்ட தவறு என்பதால் அவர்களின் தண்டனை குறைக்கப்படுகிறது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்தை அவர்கள் எரிக்கவில்லை” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.