முதல் பிரசார கூட்டத்தில் 15 நிமிடமே பேசிய தீபா: ஆதரவாளர்கள் அதிர்ச்சி
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை ஏ.ஜி. கோவில் தெருவில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று இரவு நடந்தது.
இந்த தொகுதியில் போட்டியிடும் ஜெ.தீபா தன்னை அறிமுகப்படுத்தி தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் தீபாவின் ஆதரவாளர்கள் மாலை 5 மணிக்கே கூடினார்கள். கூட்டத்தில் நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டு இருந்தனர். தீபாவின் வருகைக்காக ஆதரவாளர்கள் காத்திருந்த நிலையில் இரவு 8.45 மணிக்கு அவர் மேடைக்கு வந்தார்.
தீபா ஆவேச உரை நிகழ்த்துவார் என்று ஆவலுடன் தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தீபா 9.20 மணிக்கு தீபா பேசத் தொடங்கி 9.35 மணிக்கு பேச்சை முடித்தார். 15 நிமிடமே அவர் உரையை நிகழ்த்தினார். இது காத்திருந்த ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. மறைந்த முதல்வர் ‘அம்மா’வால் வளர்க்கப்பட்டது. உன்னை பிரிந்து வாழும் எண்ணற்ற பிள்ளைகள் உண்டு. நீங்கள் பெற்றெடுத்த பிள்ளையாகிய நான் மக்களுக்காக உழைப்பேன். எந்த தீய சக்தியாலும் எனது லட்சிய பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது. என் பொது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிப்பேன்.
ஒழுக்க நெறியுடன் உழைத்து அதன்படி ஆட்சி செய்வேன். தெற்காசிய நாடுகளுக்கு சென்று பல ஆராய்ச்சி படிப்புகளை படித்து பட்டம் பெற்று இருக்கிறேன். அதன் மூலம் விருதுகளும் வாங்கி இருக்கிறேன். ஆனால் நீங்கள் அளிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பட்டம்தான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தரக்கூடியது.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் துரோகிகள் கூட்டத்தை ஒழித்து அவர்களின் முகத் திரையை கிழிப்பேன். எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வளர்த்த இந்த கட்சியை கட்டி காப்பேன்.
‘அம்மா’ விட்டுச் சென்ற பணிகள், தொண்டுகளை என் வாழ்க்கையின் சபதமாக ஏற்கிறேன். என்னுடைய அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரும், அம்மாவின் ஆசியுடன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். படகு சின்னத்தில் என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு தீபா பேசினார்.
தீபா நீண்ட நேரம் பேசுவார் என்று ஆவலுடன் எதிர் பார்த்திருந்த ஆதரவாளர்களுக்கு தீபா சுருக்கமாக பேச்சை முடித்தது அதிர்ச்சியை அளித்தது.
மேலும் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் நினைத்த தொண்டர்களுக்கு அவர் கூட்டத்தை முடித்து விட்டு புறப்பட்டு சென்றது பெரும் ஏமாற்றமாக இருந்தது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.