டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் மரணம்; தற்கொலைதான். உடலில் எந்தக் காயங்களும் இல்லை –போலீசார் தகவல்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 30) கடந்த இரு தினங்களுக்கு முன் தனது நண்பரின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை குறித்து தகவல் கிடைத்ததும் டெல்லி போலீசார் மாணவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாதி பாகுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் எம்.பில். – பி.எச்.டி சேர்க்கையில் சாதி சம உரிமை வழங்கப்படவில்லை என்றும் வாய்மொழி தேர்விலும் சம உரிமை வழங்கப்படவில்லை என்றும் அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது. தங்கள் மகன் தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை அல்ல என்று மாணவனின் பெற்றோரும் கூறியுள்ளனர். மாணவன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தலித் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
மாணவர் மரணம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவனின் உடல் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மாணவன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாணவனின் உடலில் எந்த காயமும் இல்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.