இரட்டை இலை சின்னம் தொடர்பாக மேல்விவர விசாரணைகளுக்காக சுகேஷை சென்னைக் கொண்டுவர டெல்லி போலீஸ் திட்டம்.
அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா அணியும், ஓ.பி.எஸ். அணியும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. அத்துடன், இரட்டை இலையை யாருக்கு வழங்குவது? என்பது குறித்து இரு தரப்பினரிடமும் பிரமாணப் பத்திரங்கள் பெற்று அதன் அடிப்படையில் முடிவு செய்ய உள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற்று கொடுக்க சுகேஷ் டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் அறை எண் 263-ல் 10 நாட்கள் தங்கி இருந்துள்ளார். அவருக்கு கடந்த 15-ந்தேதி பணம் கிடைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனின் விசாரணை நடப்பதற்கு 2 தினங்களுக்கு முன்பு சுகேசுக்கு ரூ.10 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் தினகரன் மூலம் கொச்சி வழியாக சுகேசுக்கு கிடைத்து உள்ளது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகேசிடம் இருந்து ரூ.1.3 கோடி பணம்தான் கைப்பற்றப்பட்டது. மீதியுள்ள ரூ.8.7 கோடி பணம் மாயமானது.
இந்த பணம் பற்றி அறிவதற்காக அவரை டெல்லியில் 5 இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பண பரிமாற்றம் குறித்தும் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு சுகேஷ் ஒத்துழைக்க மறுப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி நட்சத்திர ஓட்டலில் சுகேஷ் தங்கி இருந்த போது 10 அதிகாரிகள் அவரை சந்தித்து இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் பெற்று தருவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. தனக்கு இருந்த செல்வாக்கை பன்படுத்தி அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார். இந்த அதிகாரிகளுக்கு சுகேஷ் மதுவுடன் கூடிய ஆடம்பரமான விருந்தும் கொடுத்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவேன் என்று தினகரனிடம் சுகேஷ் உத்தரவாதம் கொடுத்து இருந்ததும் தெரிய வந்தது.
இந்த சூழ்நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தெரிவித்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் சென்னை வந்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தரை 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், மேலும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சுகேஷ் சந்தருடன் டெல்லி போலீசார் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டனர். இன்று இரவு சென்னை வந்து சேர்கிறார்கள். பின்னர், சுகேஷ் சந்தர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லஞ்சப் புகார் தொடர்பாக சென்னையில் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.