‘பஸ் எரிப்பு திட்டமிட்ட செயல் அல்ல ; தண்டனையைக் குறைக்கவேண்டும்’ தூக்கு தண்டனைக் கைதிகள் கோரிக்கை.
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் 3 மாணவிகள் இறந்தது திட்டமிட்ட செயல் அல்ல என்று தூக்கு தண்டனை பெற்ற அதிமுக ஆதரவாளர்கள் 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
‘பிளசன்ட் ஸ்டே’ ஓட்டல் வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டபோது, தமிழகமெங்கும் அதிமுக-வினர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரியில் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்றிற்கு அவர்கள் தீவைத்தனர். இதில் பஸ்ஸில் பயணம் செய்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். பஸ்ஸில் பயணம் செய்த மற்ற 44 மாணவிகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய அதிமுக-வினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. உச்ச நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு தண்டனையை உறுதி செய்தது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி, மூவரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முனியப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், நெடுஞ்செழியன், ரவீந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார் ஆகியோர் ஆஜராயினர்.
நாகேஸ்வர ராவ் வாதிடும்போது, ‘கட்சித் தலைவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதும் மனமுடைந்த தொண்டர்கள் விரக்தி காரணமாக வன்முறையில் ஈடுபட்டனர். மாணவிகளை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பஸ்ஸுக்கு தீவைக்கவில்லை. இச்சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை அல்ல. கூட்டத்தினருடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்ட நேரத்தில் நடந்த தற்செயலான சம்பவமாகும்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் நோக்கம் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில், அரசு சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்பது மட்டுமே. வேளாண் பல்கலைக்கழகம் அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், அந்த பஸ்ஸுக்கு தீவைப்பதன் மூலம் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. எனவே, தண்டனையை குறைக்க வேண்டும்’ என்று வாதிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.