மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேற வேண்டும்- விஜயகாந்திடம் மாவட்டச் செயலாளர்கள் வற்புறுத்தல்.
சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிடவும் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.
அமைப்பு ரீதியாக உள்ள 59 மாவட்டச் செயலாளர்களில் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் கடந்த 2 நாட்களில் 40 பேரிடம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இன்று மீதமுள்ள 19 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க. நிர்வாகிகள் கூறியதாவது:-
தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 2006, 2011 சட்டசபை தேர்தல்களிலும், 2009, 2014 பாராளுமன்ற தேர்தல்களிலும் சட்டசபை தொகுதி வாரியாக தே.மு.தி.க பெற்ற வாக்குகள், தற்போது வாங்கியுள்ள வாக்குகள் குறித்து விஜயகாந்த் கேட்டறிந்தார்.
வாக்குகள் சரிந்ததற்கு என்ன காரணம்? தொகுதிகளில் என்னென் பிரச்சனைகள் உள்ளன. தொகுதி வாரியாக ரசிகர் மன்ற காலத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் உறுப்பினர் சேர்க்கை போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.
54 லட்சம் உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏன் என்று மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் கேட்டார்.
நாங்களும் பல்வேறு ஆலோசனைகளை விஜயகாந்திடம் முன் வைத்தோம். அ.தி.மு.க., தி.மு.க.வினர் போல தே.மு.தி.க. தொண்டர்கள் பணபலம் கொண்டவர்கள் அல்ல. மக்களுக்காக மக்கள் பணி நிகழ்ச்சிகளை நடத்துவது போல தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தொண்டர்களிடம் தலைமை நெருங்கி பழக வேண்டும்.
தலைமைக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் சொல்வதை கேட்டு தொண்டர்கள் மீதோ, நிர்வாகிகள் மீதோ நடவடிக்கை எடுக்க கூடாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட செய்வதுடன் தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்ய வேண்டும்.
மக்கள் நலக் கூட்டணியில் இருப்பதால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை. எனவே மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை பலமான கூட்டணியுடன் சேர்ந்தோ அல்லது தனித்தோ சந்திக்க வேண்டும்.
தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட 102 வேட்பாளர்களுடன் விஜயகாந்த் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.