வேலூரில் நடுரோட்டில் காரை மறித்து வி.சி.சந்திரகுமார் மீது தே.மு.தி.க. நிர்வாகி தாக்குதல்
தே.மு.தி.க.வில் இருந்து விலகிய வி.சி.சந்திரகுமார் மக்கள் தே.மு.தி.க.வை தொடங்கி தி.மு.க. கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டார். சில வாரங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்த அவர், மக்கள் தே.மு.தி.க.வை தி.மு.க.வுடன் இணைக்க உள்ளார். இதற்கான விழா 17-ந் தேதி சேலத்தில் நடக்கிறது.
இதனையொட்டி வி.சி.சந்திரகுமார் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று வேலூரில் நடந்த கூட்டத்தில் வி.சி.சந்திரகுமார் கலந்து கொண்டார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை முடிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. சி.எச்.சேகர் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் காரில் புறப்பட்டார்.
பில்டர்பெட் ரோட்டில் கார் சென்றபோது தே.மு.தி.க. பிரமுகரான விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து வி.சி.சந்திரகுமாரின் கார் முன்பு திடீரென மறித்து நின்றார். இதனால் சந்திரகுமாரின் கார் நிறுத்தப்பட்டது.
உடனே அவர் ‘விஜயகாந்த் பற்றியும், தே.மு.தி.க. பற்றியும் ஏன் அவதூறாக பேசுகிறாய்’ என்று ஆவேசமாக கூறியபடி காருக்குள் இருந்த வி.சி.சந்திரகுமார் அருகில் சென்று அவரை தாக்கினார். உஷாரான சந்திரகுமார், மணிகண்டனின் கையை பிடித்துக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. உடன் இருந்தவர்கள் அவர்களை தடுத்தனர். உடனே வி.சி.சந்திரகுமார் காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.