தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் மேலும் சிலர் விலக முடிவு
தே.மு.தி.க.வில் இருந்து மேலும் சில மாவட்டச் செயலாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சிகளில் சேர திட்டமிட்டுள்ளனர்.
தே.மு.தி.க.வின் தலைமை மீது அதிருப்தி அடைந்த 7 மாவட்ட செயலாளர்கள், 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை தேர்தலுக்கு முன்பே விலகி சென்றனர்.
சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்தீபன், சி.எச்.சேகர் ஆகியோர் மக்கள் தே.மு.தி.க. என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர்.
தேர்தலில் தோல்வி அடைந்த 3 பேரும் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்களை தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சி வருகிற 17-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடைபெறுகிறது.
தே.மு.தி.க.வில் இருந்து விலகி சென்ற முன்னாள் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்களும் ஈரோடு, கோபி, கோவை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், தேனி, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அதிருப்தி தே.மு.தி.க.- நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து ஒருங்கிணைக்கின்றனர்.
இதற்கிடையில் திருச்செங்கோடு முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார், தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் கடந்த வாரம் இணைந்தார். இதுவரையில் 18 மாவட்ட செயலாளர்கள், 5 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தே.மு.தி.க.வில் இருந்து வெளியேறி உள்ளனர்.
மேலும் சில அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் விலக திட்டமிட்டுள்ளனர். அவர்கள் விலகி சென்ற நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க.- தி.மு.க. ஆகிய இரு கட்சிகளில் எதில் சேர்ந்தால் அரசியல் எதிர் காலம் நன்றாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்டு வருகின்றனர்.
சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அ.தி.மு.க.வில் விரைவில் இணைகிறார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.