எங்களுக்குக் கிடைத்த உளவுத்துறை தகவல்படி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் – பிரேமலதா விஜயகாந்த் சொல்கிறார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி த.மா.கா. அணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மா.வீரக்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நேற்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் கேப்டன் தலைமையிலான மெகா கூட்டணி உருவாகியுள்ளது.
இந்த கூட்டணி உருவானபோது 3-வது அணி என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது முதல் அணியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகும் அணியும் இதுதான்.
தொடர்ந்து வெளியாகும் கருத்துக்கணிப்புகளை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவல்படி நமது கூட்டணி 130 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சுமார் 700 தொழிற்சாலைகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. நமது கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
எனவே தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்க ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் மா.வீரக்குமாருக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.