திமுக- காங்கிரஸ் அணி தோற்றதற்குக் காரணம் ராமதாஸூம், விஜயகாந்தும்தான். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும்.- ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கடந்த ஐந்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று வந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுகிற வலிமை இக்கூட்டணிக்குத்தான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.
ஆனால் அ.தி.மு.க. – தி.மு.க. இரண்டையும் வீழ்த்தப்போவதாக கூறி, மக்கள் நலக்கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி என பிரிந்து தேர்தல் களத்தில் போட்டியிட்டதன் விளைவாக இன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிப் பெற்றுள்ளது. நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. 41 சதவீத வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட 130 இடங்களிலும், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி 38 சதவீத வாக்குகளைப் பெற்று 102 இடங்களிலும் வெற்றி பெறுகிற சூழல் ஏற்பட்டுள்ளது. 3 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்ற அ.தி.மு.க. கூடுதலாக 30 இடங்களில் வெற்றி பெறுகிற நிலை ஏற்படுகிறது.
அ.தி.மு.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் அகற்றப்பட்டிருக்கும். இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் நலக் கூட்டணியும், பாட்டாளி மக்கள் கட்சியும்தான். தி.மு.க., அ.தி.மு.க.வை ஒருசேர வீழ்த்துகிற வலிமை இல்லை என்பதை நன்கு அறிந்தபிறகும் மூன்றாவது, நான்காவது அணி ஏன் அமைத்தார்கள் என்பதற்கு அவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு யாருக்காவது ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டுமென்று சொன்னால் முதலில் விஜயகாந்த், அடுத்து மருத்துவர் ராமதாஸ் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை மீண்டும் அமர்த்திய பாவத்தை செய்ததற்காக மக்கள் நலக் கூட்டணியையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் பாடம் புகட்டுகிற வகையில் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அத்தோடு, அக்கட்சியின் முக்கிய தலைவர்களான விஜயகாந்த், தொல். திருமாவளவன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தோல்விக்குப் பிறகாவது பாடம் கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம். ஜனநாயகத்தை பணநாயகம் வென்றிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான எதிர்கட்சியை தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி சார்பாக மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இக்கூட்டணியைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.