பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபடும் இயக்கம் திமுக மட்டுமே என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு கொளத்தூர் தொகுதிக்குப்பட்ட பெரியார் நகர் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஸ்டாலின், 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் கல்வி உதவித் தொகை, 1,300 பேருக்கு வேட்டி, சட்டை, அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
”திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் 89 இடங்களில் வென்று வலுலான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் மக்கள் பணியாற்றுவதில் திமுக பின்வாங்கியதில்லை.
நபிகள் நாயகம் பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றதுக்காகவும் பல பணிகளை மேற்கொண்டார். பெரியார். அண்ணா, காயிதே மில்லத் ஆகியோரைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும் பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
பெண்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு என திமுக ஆட்சியில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக மட்டுமே. 2-வது முறையாக என்னை வெற்றி பெறச் செய்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.