வள்ளுவர் சிலை பற்றிய தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்- முன்னாள் எம்பி மாணிக் தாகூர் விளக்கம்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை கரையில் திருவள்ளுவர் சிலையை அமைக்க சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அங்குள்ள பூங்காவில் சிலை கேட்பாரற்று கிடந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மாணிக் தாகூர் கூறியதாவது:-
ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை சரியான இடத்தில் நிறுவ சட்டரீதியான அனுமதி எதுவும் பெறப்படவில்லை. அதனால் தான் இப்போது பிரச்சினையை சந்தித்து வருகிறோம். இது தொடர்பாக தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
ஹரித்துவாரில் உள்ள ஹர்கிபவ்ரி அனைவரும் புனித நீராடும் இடம். அந்த இடத்தில் யாருடைய சிலைக்கும் இடம் தர மாட்டார்கள். பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் மாநில காங்கிரஸ் அரசையும், உள்ளூர் நிர்வாகத்தையும் கலந்து ஆலோசிக்காமல் சிலையை வைக்க முயற்சி செய்தார். உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மேகாலயா கவர்னர்கள் திறப்பு விழாவில் பங்கேற்க தேதியை வாங்கி விட்டு அந்த தேதியில் திறந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் செயல்பட்டிருக்கிறார்.
புனித நீராடும் இடம் என்பதால் அந்த இடத்தை நிர்வகிக்கும் கங்கா சபா நிர்வாகத்தினர் சிலையை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சங்கராச்சாரியா சவுக் பகுதியில் சிலையை வைக்க முயற்சித்து உள்ளனர். ஆனால் அங்கு வைக்க சங்கராச்சாரியர் மடத்தில் இருந்து ஆட்சேபம் கிளம்பியது.
பின்னர் உத்தர பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான பொதுப்பணித்துறை தங்கும் விடுதி வளாகத்தில் சிலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அவசர அவசரமாக திறக்கப்பட்டது. எனினும் இதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் சிலையை பிளாஸ்டிக் பையால் மூடி வைத்திருந்தார்கள்.
இதுபற்றி அறிந்த நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், உத்தரகாண்ட் முதல்-மந்திரி ஹரிஷ்ராவத்தை தொடர்பு கொண்டு கடந்த 19-ந் தேதி பேசினார். அவர் உடனடியாக திருவள்ளுவர் சிலையை தகுந்த இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சிலை பத்திரமாக இருக்க வேண்டும் என்று மேளா பவன் கட்டுப்பாட்டு அறை உள்ள வளாகத்திற்கு கொண்டு வைத்தனர்.
கங்கை கரையில் சிலைகள் வைக்க சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல் உள்ளது. அதன் அடிப்படையில் சட்ட சிக்கல் ஏதுமின்றி சிலையை வைக்க உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டத்துறையின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது. வீட்டு வசதி துறையின் செயலாளரையும் தொடர்பு கொண்டோம். அவர் 24-ந் தேதி ஹரித்துவாரில் எந்த இடத்தில் சிலையை நிறுவுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக கூறினார்.
அதற்குள் மாநில சட்டத்துறையும் உரிய சட்ட ஆலோசனைகளை வழங்கும். எனவே இன்னும் ஒரு வாரத்துக்குள் திருவள்ளுவர் சிலை உரிய இடத்தில் வைக்கப்படும். நானும், முன்னாள் எம்.பி. விஸ்வநாதனும் இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஹரித்துவாரில் எந்த இடத்தில் சிலை வைப்பது என்பதுதான் பிரச்சினையே தவிர திருவள்ளுவர் சிலை பிரச்சினை கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளுவர் சிலை பிரச்சினை குறித்து உத்தரகாண்ட் மாநில தமிழ் சங்க செயலாளர் டாக்டர் சி.பாஸ்கர் கூறுகையில், ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கோ, சிலைக்கோ யாரும் எதிராக செயல்படவில்லை. வைக்கும் இடம் குறித்து தான் ஆட்சேபம் எழுந்தது. எனவே வதந்திகளை நம்பாதீர்கள்.
இது தொடர்பாக 19-ந் தேதி நானும், ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மீனாட்சிசுந்தரமும் உத்தரகாண்ட் முதல்-மந்திரியை சந்தித்து பேசினோம். அரசு வழியாக உரிய தீர்வுகாண முதல்-மந்திரி உத்தரவாதம் அளித்ததுடன், நடவடிக்கையும் அவர் எடுத்தார். 24-ந் தேதி சிலை வைக்கும் இடம் முடிவு செய்யப்படும் என்றார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.