300 பேருடன் சென்ற துபாய் விமானம் தீப்பற்றி வெடித்தது. அனைவரும் உயிர் தப்பினர்.
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு நேற்று காலை 10 மணிக்கு 288 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் எமிரேட் சின் போயிங் விமானம் புறப்பட்டது.
துபாய் விமான நிலையத்தில் இந்திய நேரப்படி பகல் 2.20 மணிக்கு விமானம் தரை இறங்கியது. அப்போது திடீரென விமானத்தின் முன் சக்கரத்தில் பழுது ஏற்பட்டு புகை கிளம்பியது. இதுபற்றி விமான ஊழியர்கள் பயணிகளை எச்சரித்தனர்.
விமானம் ஓடு பாதையில் இறங்கியதும், அவசர வழிகள் திறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் மின்னல் வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். 90 வினாடிகளில் பயணிகள் வெளியேறியதும் விமானத்தின் பின் பகுதி குபீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உயிர் தப்பியதாக விமான நிறுவனம் அறிவித்தது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் சென்ற பயணிகளில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விமானம் தீப்பிடித்த தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். விமானத்தில் பயணம் செய்த உறவினர்களின் கதி என்ன? என்று கலங்கிய அவர்கள் உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அப்போது விமான நிலையத்தில் நடந்த சம்பவங்களை பயணிகள் தங்களின் உறவினர்களுக்கு பீதியுடன் விவரித்தனர்.
பத்தினம் திட்டாவில் இருந்து துபாய்க்கு சென்று விபத்தில் உயிர் பிழைத்த ஜிஜி கூறியதாவது:-
திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் எந்த சிக்கலும் இல்லாமல் கிளம்பியது. துபாயை நெருங்கியபோது, விமான கேபினில் இருந்து புகை வந்தது. விமானத்திற்குள் இருந்த பயணிகள் இதனால் மூச்சு திணறலுக்கு ஆளானார்கள். ஏதோ விபரீதம் ஏற்பட்டதை நாங்கள் புரிந்து கொண்டோம்.
அதுபற்றி அபாய அறிவிப்பு ஏதாவது வரும் என்று எதிர்பார்த்தோம். அதற்குள் விமானம் ஓடு பாதையில் இறங்கி விட்டது. அப்போது பலத்த சத்தம் கேட்டது. உடனே விமானம் முழுவதும் புகை மூட்டமாக மாறியது. விமான ஊழியர்கள் அவசர பாதையை திறந்து விட்டு வெளியேறும்படி எச்சரித்தனர். பயணிகள் அனைவரும் அலறியடித்து வெளியேறினோம்.
குழந்தைகளுடன் வந்தவர்களும், முதியவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஒருவரும் அவர்களின் உடமைகளை எடுக்கவில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் அவசர பாதை வழியாக வெளியே குதித்தோம். இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
ஒருவரையொருவர் முண்டியடித்து வெளியேறியதாலும் காயங்கள் ஏற்பட்டன. விமான ஓடு பாதையில் இறங்கியதும் அங்கு காத்திருந்த வாகனங்கள் எங்களை அலேக்காக ஏற்றிக்கொண்டு விமான நிலையத்தின் மறுபுறத்திற்கு கொண்டு சென்றனர். அனைத்து பயணிகளும் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். நாங்கள் வெளியேற்றப்பட்டதும், விமானத்தை தீயணைப்பு வண்டிகள் சூழ்ந்து நின்றன.
அப்போது குண்டு வெடித்ததுபோல பலத்த சத்தம் கேட்டது. விமானத்தின் பின்பகுதியில் இருந்து பந்து போல தீ பிழம்பு கிளம்பியது. கரும்புகையும் சேர்ந்து அந்த பிராந்தியமே கருப்பாக மாறியது. நாங்கள் இதயத்தை பிடித்தப்படி, பீதியில் உறைந்து போனோம். விமானத்தில் இருந்திருந்தால் என்ன கதிக்கு ஆளாகி இருப்போம் என்று எண்ணிப் பார்த்ததும் கதி கலங்கி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே விமான விபத்திற்கான காரணம் என்ன? விமானம் வெடித்தது எப்படி? என்பது பற்றி விமான விபத்துகளை ஆய்வு செய்யும் வல்லுநர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். விமானம் துபாய் விமான நிலையத்தை அடைந்ததும், விமானத்தை தரை இறக்கும் ‘லேண்டிங் கியர்’ பழுதாகி போனதாகவும் இதனால் விமானத்தை ஓடு பாதையில் சரியாக இறக்க முடியாத நிலை உருவானதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி விமான விபத்து புலனாய்வு பிரிவின் செயல் இயக்குனர் இஸ்மாயில் அப்துல் வகீத் கூறும்போது, விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணி தொடங்கி உள்ளது. விமானம் தரை இறங்கும் முன்பு விமான கேபினுக்குள் நடந்தது என்ன? என்பது பற்றி அறிந்து கொள்ள விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி தகவல்களை தெரிந்து கொள்வோம்.அதன் பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்று கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.