மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல். மம்தா தொடர்வாரா?
மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் 18 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தொகுதிகள் அனைத்தும் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் மிகுந்த பழங்குடியினர் மண்டலமான மேற்கு மிட்னாப்பூர், பங்குரா மற்றும் புருலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் அடங்கியுள்ளன.
இந்த தொகுதிகளில் 3 அணிகள் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 133 பேர் களத்தில் உள்ளனர். இதில் 11 பேர் பெண் வேட்பாளர்கள்.
இன்றைய தேர்தலில் 40 லட்சத்து 9 ஆயிரத்து 171 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 4 ஆயிரத்து 945 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான மம்தா பானர்ஜி, முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வந்த இடதுசாரிகளை வீழ்த்தி கடந்த முறை வெற்றி பெற்ற அவர், இந்த தேர்தலிலும் தனது ஆட்சியை தக்க வைப்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ்–இடதுசாரி கட்சிகள் ஒரு அணியாகவும், பா.ஜனதா மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. மாநிலத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் வரிந்து கட்டும் நிலையில், மறுபுறம் மக்களவை தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெற்ற நம்பிக்கையில் பா.ஜனதாவும் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேற்கண்ட தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் அதிகளவிலான மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் மிகுந்த இந்த தொகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய ரிசர்வ் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.