மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டத்திலுள்ள மோசடிகள் குறித்து ஸ்டாலின் கேள்வி.
ஜெயல லிதா அறிவித்துள்ள புதிய திட்டங்கள் குறித்து ஸ்டாலின் தமது முகநூல் பக்கத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
‘சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தருவது முறையற்ற செயலாகும். ஆனால் முடிவடையவிருக்கும் அ.தி.மு.க ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி அமைச்சர்கள் பலரும் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய முதல்வர் ஜெயலலிதா தனது உரையில், அ.தி.மு.க அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
தனது உரைக்கு தானே மறுப்பு தெரிவிப்பதுபோல, 60 வயது நிறைந்த மூத்த குடிமக்களுக்கு பிப்ரவரி 24 முதல் சென்னையில் இலவச பேருந்து பயணத்திற்கான பாஸ் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அ.தி.மு.கவின் 2011 தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட இந்த வாக்குறுதியை, ஆட்சி முடியப் போகும் நேரத்தில், தனது பிறந்தநாளையொட்டி சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு மட்டும் நிறைவேற்ற முன் வந்திருக்கிறார். அதுவும் ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்திருப்பதிலிருந்து எத்தனை பேர் எந்தளவு பயனடைவார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
சென்னைக்கு மட்டும் இந்தத் திட்டம் எனக் கூறி, மற்ற மாவட்டங்களில் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருப்பதிலிருந்தே இந்தத் திட்டத்தின் மோசடியைப் புரிந்துகொள்ளலாம். இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும் எனத் தெரிந்தே இப்படியொரு அறிவிப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அம்மா குடிநீர் என்ற பெயரில் சென்னையில் வழங்கப்படும் என அறிவித்தார். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என நான் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்பியபின் ஒப்புக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா அளித்தவை தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்ல, மோனோ ரயில் திட்டம், சென்னைக்கு துணை நகரம், வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் என ஆளுநர் அறிக்கையிலும் 110 விதியின் கீழும் அளித்த வாக்குறுதிகள் ஏராளம். அவற்றையெல்லாம் நிறைவேற்றி யிருக்கிறாரா? உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2 லட்சத்து 42ஆயிரம் கோடி ரூபாய் நிதி வருவதாகச் சொன்னாரா? அந்த முதலீட்டைப் பெற்றுவிட்டாரா? அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் மின்வெட்டை அகற்றுவேன் என்று சொன்னவர், ஒரு மெகாவாட் மின்னுற்பத்தியைக் கூட தன் ஆட்சியில் தொடங்காமல் இப்போது தமிழகம் மின்மிகை மாநிலம் என்கிறாரே, தமிழகத்தின் மின்தேவை எவ்வளவு, எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, வெளியிலிருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது, அதன் விலை என்ன, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எந்தளவு கடன்சுமையில் இருக்கிறது என்பதையெல்லாம் வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் விவசாயப் புரட்சிக்காகவும், மீனவர்களைப் பாதுகாக்க தனிப் படை அமைப்பது தொடர்பாகவும் கொடுத்த வாக்குறுதிகள் யாருக்கும் தெரியாமல் எப்படி நிறைவேற்றப்பட்டன என்ற ரகசியத்தையும் ஜெயலலிதா வெளியிடுவாரா?
தமிழகத்தின் வளர்ச்சியை வீழ்ச்சிப் பாதைக்குத் தள்ளிய ஆட்சிதான் 5 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சி. அதை மக்கள் உணர்ந்து தக்க பாடம் புகட்டுவதற்கான நாளை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த உண்மையை மறைப்பதற்காகத்தான் சட்டமன்றத்திலேயே உண்மைக்கு மாறான தகவல்களை முதல்வர் பொறுப்பில் இருப்பவர் தெரிவிக்கிறார். ஆனால், உண்மையை உணர்ந்துள்ள மக்கள் மன்றம் தேர்தல் நாளில் அவருக்கு உரிய தீர்ப்பினை வழங்கக் காத்திருக்கிறது. ’’
இவ்வாறு கூறியுள்ளர் ஸ்டாலின்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.