பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள வீரப்பன் படத்துக்குத் தடைவிதியுங்கள்’- ஐகோர்ட்டில் வழக்கு
பெங்களூருவைச் சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படத்தில் வீரப்பனைக் கொல்லும் போலீஸ் அதிகாரியாக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னடத்திரையுலகின் நம்பர்-1 கதாநாயகரும் அவர்தான். “இந்தப் படத்தை எனக்குப் போட்டுக்காட்டாமல் வெளியிடக்கூடாது” என்று ஏற்கெனவே வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பத்திரிகையாளர்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் பன்னீர் செல்வி என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
கன்னட நடிகர் சிவராஜ்குமார் போலீஸ் அதிகாரி செந்தாமரை கண்ணன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திய அதிரடிப்படை தலைமை தாங்கி வீரப்பனைப் பிடித்ததாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பல பொய்யான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக அறிகிறேன். இந்தப் படத்தில் வீரப்பன் ஒரு கொடூர கொலைகாரன் போலவும், 184 பொதுமக்கள், 97 போலீஸ் காரர்கள், 900 யானைகளைக் கொன்றதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. சில மதரீதியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் வீரப்பன் மனைவி பலரை கொலை செய்வதுபோல படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை. மேலும் இந்தப் படத்தில் தமிழக போலீசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிரான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளது. அதேபோல காவிரி விவகாரத்தில் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர். எனவே பொய்யான தகவல்களுடன் இந்தப் படம் வெளியானால் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே இந்தப் படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும் – இவ்வாறு வழக்கு போடப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.