தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து குலாம்நபி ஆசாத் கருணாநிதியுடன் பேச்சு.
தமிழக சட்டசபைக்கு மே 16–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 27 நாட்கள் உள்ளன.
தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான அணிகளுக்கிடையே 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி கட்சிகளிடையே தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளன. முதலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்தது
காங்கிரஸ் கட்சியில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே 8 பேர் கொண்ட குழுவை மேலிடம் ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலான அந்த குழுவில் கோபிநாத், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, தங்கபாலு, யசோதா, தனுஷ்கோடி ஆதித்தன், ஏ.பி.சி.வி. சண்முகம் ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் இருவரும் இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் இருவருக்கும் தமிழக காங்கிசாசார் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிறகு அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரத்துக்கு வந்தனர். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் வந்தனர்.
அவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்கள். தமிழக அரசியல் களத்தின் தற்போதைய சூழ்நிலை பற்றி விவாதித்த அவர்கள் பிறகு தி.மு.க.–காங்கிரஸ் கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு பற்றி விரிவாக பேசினார்கள்.
முன்பு போல அதிக தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது என்று ஏற்கனவே தி.மு.க. தலைவர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.
இந்த யதார்த்தத்தை நன்கு உணர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர்களும் 40 முதல் 50 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு தி.மு.க. தலைவர்களிடம் தெரிவித்தனர்.
ஆனால் தி.மு.க. தரப்பில் காங்கிரசுக்கு 30 முதல் 35 தொகுதிகளை மட்டுமே தர இயலும் என்றனர். தே.மு.தி.க. வரும்பட்சத்தில் இந்த குறைந்த அளவு தொகுதிகளை பெற்று கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் முன்பு முடிவு செய்திருந்தனர்.
ஆனால் வைகோ அணியுடன் தே.மு.தி.க. சென்று விட்டதால் தி.மு.க. கைவசம் நிறைய தொகுதிகள் உள்ளன. ஆகையால் 40 முதல் 50 தொகுதிகளை ஒதுக்கி தாருங்கள் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தி.மு.க.விடம் பேசினார்கள்.
அதை தி.மு.க. ஏற்கவில்லை. 2006, 2011–ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மிக குறைந்த தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டதால் தொண்டர்களிடம் அதிருப்தி நிலவியது. எனவே இந்த தடவை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பதில் இழுபறி ஏற்பட்டது. இதுபற்றி கருணாநிதியும்–குலாம்நபி ஆசாத்தும் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து தி.மு.க.–காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூக முடிவுக்கு வந்தது. ஆனால் டெல்லி சென்று மேலிடத் தலைவர்களுடன் பேசிவிட்டு இறுதியான முடிவுக்கு வரவிருப்பதாக குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.