31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்: நெடுவாசலில் மக்கள் ஒப்புதலுடன் திட்டம் – அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
நெடுவாசல், காரைக்கால் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான சிறிய நிலப்பகுதிகளின் ஏலம் 2016’ தொடர்பாக தனியார் மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 22 நிறுவனங்களுடன் மத்திய அரசு நேற்று ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
நிலப்பகுதியில் 23, கடல் பகுதியில் 8 என 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் இந்த ஒப்பந்தத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அந்தந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். இதில் 22 நிறுவனங்கள் கையெழுத்திட்டன. இதில் குறிப்பாக, தமிழகத்தின் நெடுவாசல் மற்றும் புதுச்சேரியின் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘தி இந்து’வில் மட்டும் செய்தி வெளியாகி இருந்தது. நெடுவாசலில் ‘ஜெம் லேபாரட்டரீஸ்’ என்ற தனியார் நிறுவனமும், காரைக்காலில் பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனமும் ஒப்பந்தம் இட்டுள்ளன.
ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின் அமைச்சர் பிரதான் பேசும்போது, “நம் நாட்டின் எரிசக்தி தேவையில் 70 முதல் 80 சதவீதம் வரை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் பிரதமர் நரேந்திர மோடி கொள்கையின்படி வரும் 2022-ம் ஆண்டில் 10 சதவீதம் குறைக்கப்படும். இதன்மூலம் ரூ.46,400 கோடி மிச்சமாகும் என எதிர்பார்க்கிறோம். இதில் ஈட்டுத்தொகையாக ரூ.5 ஆயிரம் கோடியும் அரசுப் பங்கின் லாபமாக ரூ.9,300 கோடியும் கிடைக்கும். இத்துடன் சுமார் 37,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது முதல்கட்ட ஏலம் முடிந்துள்ளது. 2-வது கட்ட ஏலத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.
ஒப்பந்ததாரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கு அரசு அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கும் என உறுதி அளித்தார். அச்சங்கள் தீர்க்கப்படும்இதுகுறித்து அமைச்சர் பிரதான் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நெடுவாசலில் பணி தொடங்குவதற்கு முன், தமிழக முதல்வர் மற்றும் உள்ளூர் மக்களிடம் கலந்து பேசுவோம். இதில் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிப்போம்.
கிராமவாசிகளுக்கு அறிவியல் ரீதியாக சில சந்தேகங்கள் உள்ளன. நிலத்தடி நீர், நிலப் பயன்பாடு, சுற்றுச்சூழல் போன்றவற்றிலும் ஐயப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட மக்களுடன் ஆலோசனை மற்றும் விவாதம் நடத்தாமல் எந்தப் பணியும் தொடங்கப்படாது. ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது வேறு, அங்கு பணியை தொடங்குவது வேறு. எங்கள் அதிகாரிகள் நெடுவாசலுக்கு சென்று மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள்” என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.