தொடர்ந்து சரிந்துகொண்டுவரும் மதிமுகவின் ஓட்டு சதவீதம்…
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், வைகோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1993–ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து வைகோ நீக்கப்பட்டார்.
வைகோவுக்கு ஆதரவாக 9 மாவட்ட செயலாளர்களும், 400 பொதுக்குழு உறுப்பினர்களும், தி.மு.க.வில் இருந்து வெளியேறினர். இதையடுத்து வைகோ 1994ம் ஆண்டு ம.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கினார்.
ம.தி.மு.க. தொடங்கப்பட்ட போது மிகப்பெரிய எழுச்சி காணப்பட்டது. 1996–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அந்த கட்சி முதல் முறையாக போட்டியிட்டது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து 177 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதையடுத்து நடந்த 1998 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் இருந்த ம.தி.மு.க. 3 தொகுதியில் வெற்றி பெற்றது. அப்போது பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்ததால் மீண்டும் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது.
2001 சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் ம.தி.மு.க. 211 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. ஆனால் 205 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. எனினும் கனிசமான வாக்குகள் கிடைத்தன.
2004 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.–காங்கிரஸ் அணியில் நின்று ம.தி.மு.க. திருச்சி, வந்தவாசி, சிவகாசி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அணியில் 35 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2009 பாராளுமன்ற தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க. ஈரோட்டில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பின்னர் ம.தி.மு.க.வின் தேர்தல் அங்கீகாரமும் ரத்தானது.
2011–ல் சட்டசபை தேர்தலை அந்த கட்சி புறக்கணித்தது. 2014 பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா–தே.மு.தி.க. –பா.ம.க. இருந்த அணியில் ம.தி.மு.க. 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.–மக்கள் நலக் கூட்டணி–த.மா.கா. அணியில் ம.தி.முக. 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அனைத்திலும் தோற்று டெபாசிட் இழந்தது.
ம.தி.மு.க. தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 5.78 சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தது. இந்த ஓட்டு வங்கி தற்போது கணிசமாக குறைந்து உள்ளது. 5.78 சதவீதத்தில் இருந்து 0.9 சதவீதமாக குறைந்து உள்ளது.
ம.தி.மு.க. பெற்ற வாக்கு சதவீதம் விவரம்:–
1996 – 5.78 சதவீதம்
2001 – 4.65 சதவீதம்
2006 – 5.89 சதவீதம்
2009 (பாராளுமன்ற தேர்தல்) – 2.67 சதவீதம்
2014 (பாராளுமன்றம்) –2.57 சதவீதம்
2016 – 0.9 சதவீதம்
இந்த குறைவான சதவீதத்தை வைத்துக்கொண்டு மதிமுக தொடர்ந்து எப்படி அரசியலில் பயணிக்கப்போகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.