
*
குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் முதல்வர் பதவியிலிருந்து விலக முடிவு.
குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சரான ஆனந்திபென் பட்டேல், சமீப காலமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். இறந்த மாட்டின் தோலை உரித்ததாக 4 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது, அதன்பின்னர் தொடரும் தலித் போராட்டங்கள், தலித் இளைஞர்கள் தற்கொலை முயற்சி மற்றும் பட்டேல் சமூக போராட்டம் போன்ற பிரச்சினைகள் அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் முன்கூட்டியே அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பதவி விலக விரும்புவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:-
தற்போது எனக்கு 75 வயது நடந்துவருவதால் முதல்வர் பதவியில் இருந்து விடுவித்துக்கொள்ள அனுமதி கேட்டு கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். நான் முன்கூட்டியே பதவி விலகுவதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ‘துடிப்பான குஜராத் உச்சிமாநாடு’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு புதிய தலைவர் தயாராவதற்கு போதிய அவகாசம் கிடைக்கும்.
எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முடிந்தவரை மக்களுக்கு சிறப்பான சேவை செய்திருக்கிறேன். மாநில மக்களை நான் எனது சொந்த குடும்பம் போன்று விரும்பினேன். மக்களும் அந்த உணர்வையே கொண்டிருக்கின்றனர். இதற்காக குஜராத் மக்களுக்கு நான் இதயப்பூர்வமான நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குஜராத் போராட்டங்கள் காரணமாக அவர் பதவி விலக முடிவு செய்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருப்பினும், 75 வயதைக் கடந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெறக்கூடாது என பிரதமர் மோடி எதிர்பார்ப்பதால், ஆனந்திபென் பட்டேல் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.