பதவி இழந்தவுடன் பன்னீர் செல்வம் மனக்குழப்பத்தில் இருக்கிறார் –அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் பேட்டி.
ஓ.பன்னீர்செல்வம் அபத்தமாக அவதூறு கருத்துக்களையெல்லாம் விதைத்து மிகவும் மலிவான அரசியல் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
”ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு உயர் பதவிகளை வழங்கி ஜெயலலிதா அழகுபார்த்தார். நாங்கள் எல்லாம் தெய்வமாக வணங்கிவரும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் அவரின் மரணத்தைப் பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் அபத்தமாக அவதூறு கருத்துக்களையெல்லாம் விதைத்து மிகவும் மலிவான அரசியல் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டார் என்று நான் கருதுகிறேன்.
பதவி இல்லாத காரணத்தினால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. விரக்தியான மனநிலையில் உள்ளதாகவே அறிகிறேன். விரக்தியின் விளிம்பில் உள்ள அவருக்கு ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ‘உண்மைக்கு நிகராக எந்தவொரு ஆயுதமும் இல்லை’.
எத்தனையோ பேர், எத்தனையோ கருத்துக்களை எத்தனையோ முறை எப்படியெல்லாம் கூறினாலும் உண்மை என்றுமே ஒன்றுதான். அது ஒருபோதும் மாறாத சத்தியம்.
மர்மம், மர்மம் என்றார்கள், பல்வேறு வதந்திகளை கிளப்பினார்கள். அறிக்கை வெளியிட வேண்டும் என்று சொன்னார்கள். எந்தஒரு முகாந்திரமும் இல்லாமல் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் முழு ஆதாரங்களோடு 12 பக்க அப்போலோ மருத்துவமனையின் விவரமான அறிக்கை, 6 பக்க எய்ம்ஸ் மருத்துவமனையில் விவரமான அறிக்கை, 4 பக்க தமிழக அரசின் விவரமான அறிக்கை ஆக முழு ஆதாரத்தோடு வெளிப்படையாக 22 பக்க முழு விவர அறிக்கை மக்கள் மன்றத்திலே வைக்கப்பட்டுவிட்டது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பை ஓ.பன்னீர் செல்வத்தின் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். நான் முன்பே சொன்னது போல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 நாளில் அமைச்சரவையை கூட்டும் அதிகாரம் உட்பட அனைத்து பொறுப்புகளும் வழங்கப்பட்டு விட்டது.
ஜெ.வுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். சிகிச்சை குறித்து ஏதாவது ஒரு விசாரணை கமிஷன் வைத்தால் அதில் விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபரே ஓ.பன்னீர் செல்வம்தான்.
ஒருவேளை அவர் கூற்றுப்படி குற்றம் நடந்திருக்கிறது என்று சொன்னால் முதல் குற்றவாளியே ஓ.பன்னீர்செல்வம்தான்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.