சசிகலா புஷ்பாவின் 3 வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.யை, சசிகலா புஷ்பா எம்.பி. தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சசிகலா புஷ்பாவை அழைத்து அ.தி.மு.க. தலைமை விளக்கம் கேட்டது.
இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில், பேசிய சசிகலா புஷ்பா, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பின்னர் பேட்டி அளித்த அவர் எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார்.
சசிகலா புஷ்பாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒருசிலர், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரியில் உள்ள அவரது வீட்டில் தாக்குதல் நடத்தினர். கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக சசிகலா புஷ்பா தரப்பில் போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடு இருக்கும் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதைதொடர்ந்து சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டு முன்பும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டு முன்பு அம்மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.