தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் தேதியை மே 27ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் – தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு.
தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் கருத்துக்களையும் கேட்டு, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. வரும் 27ஆம் தேதிக்குள் தேதியை முடிவு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.
இதுகுறித்து திமுக வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தேர்தல் கடந்த 16ஆம் தேத நடைபெறுவதாக இருந்ததை தேர்தல் ஆணையம் வரும் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. அதற்குப் பின்னர் இரண்டு, மூன்று வழக்குகள் தொடரப்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், இந்த தேர்தலை மீண்டும் தள்ளி வைப்பதாக தெரிவித்து, 13.06.2016 அன்று நடத்துவதாக புதியதாக ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார்.
அந்த அறிவிப்பு தவறானது என்று இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டி இன்று வழக்கு தொடரப்பட்டது. இரண்டு காரணங்கள் என்னவென்றால் ஒன்று, அரவக்குறிச்சி தொகுதியில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். 6ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பார்கள். நோன்பு இருப்பதால் பெண்கள் பகல் நேரத்தில் வெளியே வருவதில்லை. ஆண்களும் நோன்பு இருப்பதால் வெளியே வந்து வரிசையில் நிற்க இயலாது. அதனை கருத்தில் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம். இரண்டாவதாக, இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் வருகின்ற ராஜ்யசபா தேர்தல்களில் தங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய வாக்குகள் முக்கியமானதாக கருதப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினோம். ராஜ்யசபா தேர்தல் 11ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதினால் 13ம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் நடைபெற்றால் சரியாக இருக்காது என்று எடுத்துரைத்தோம். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தை விசாரித்தனர். தேர்தல் ஆணைய சம்மந்தமான வழக்கறிஞர், ஜூன் 1ஆம் தேதி வரை விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், வரும் 27ஆம் தேதிக்குள் தேதியை முடிவு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு நிபந்தனை விதித்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.