நாணயமானவர்கள் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது. காங். முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜர் கல்வி வளாக புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
பெருந்தலைவர் காமராஜரை கல்வியின் தந்தையாக பார்க்கிறேன். பணம் படைத்தவர்களுக்கு போதும் என்ற மனம் கிடையாது. இன்னும் பணம் வேண்டும் என்ற மனம்தான் இருக்கும். தற்போது தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்கு கல்வி தகுதி தேவையில்லை. பணம் இருந்தாலே போதும் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் இல்லையென்றால் நாடு நிச்சயமாக முன்னேறி இருக்காது. கிராம பகுதி மக்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வெளியூர்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். பணம் படைத்தவர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற முடியும் என்ற நிலையை மாற்றி ஏழை-எளியவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டவர் காமராஜர்.
தமிழகத்தில் 9 ஆண்டுகள் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தார். சுதந்திரத்துக்காக போராடி 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். தியாகம் செய்தார். நாடு சுதந்திரம் அடைந்ததும் இந்தியாவில் பசி பட்டினி ஏற்பட்டு மக்களிடையே சண்டை ஏற்படும் என்று உலக நாடுகள் நினைத்தது. ஆனால் காமராஜர், நேரு, இந்திரா காந்தி ஆகியோரால் உலக அரங்கில் இந்தியா முன்னேறி உள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருப்பதில் மரியாதை இல்லை. காமராஜர் போன்று கல்வி தந்தையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
அரசியல் காரணமாக கடந்த சில நாட்களாக மவுன விரதம் இருந்தேன். முதன் முதலாக பங்கு பெறும் நிகழ்ச்சியாக ராஜீவ்காந்தி பெயருடைய பள்ளியில், காமராஜர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். எனக்கு அரசியல் வேண்டாம். நேர்மையானவர்களால் அரசியலில் நீடிக்க முடியாது. இந்த கிராம மக்களுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தொண்டனாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.