மனிதனுக்கு விலங்கு எப்படி தாயாக முடியும்?: பாஜகவுக்கு மார்கண்டேய கட்ஜு கேள்வி.
பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை பராமரிப்பதற்காக தனித் துறை உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கெல்லாம் உச்ச கட்டமாக குஜராத் மாநிலத்தில் பசுக்களை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு பால் தரும் பசு தாயைப் போன்றது என பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ”மனிதனுக்கு ஓர் விலங்கு எப்படி தாயாக முடியும்?” என சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ”ஆடு, எருது, ஒட்டகம் கூட நமக்கு பால் தருகிறது. அவைகளும் நமக்கு தாய் தானா?” எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நாட்டில் சர்ச்சையான நிகழ்வுகள் ஏதும் நடைபெறும் போது மார்கண்டேய கட்ஜு கருத்து கூறி அந்நிகழ்வை மேலும் பரபரப்பாக்குவார். சில நாட்களுக்கு முன்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தது குறித்து பதிவு செய்து இணையகளத்தை சூடாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.