நாட்டைவிட்டுத் தப்பிச்செல்ல விஜய் மல்லய்யாவை எப்படி அனுமதித்தீர்கள்? அரசுக்கு ராகுல் கேள்வி.
தொழிலதிபர் விஜய் மல்லையாவை எப்படி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல அனுமதித்தீர்கள்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அவர் கடந்த 2–ந்தேதியே நாட்டை விட்டு சென்று விட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையின் போது மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, விஜய் மல்லையாவை எப்படி தப்பிக்க அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியும், நிதி மந்திரி அருண் ஜெட்லியும் இந்த விவகாரம் குறித்து தங்களது உரையில் பதிலளிக்க தவறிவிட்டனர். பிரதமர் மோடி தன்னுடைய நீண்ட உரையில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.
மல்லையா போன்றவர்களை நாட்டைவிட்டு தப்பிக்க அனுமதித்தது ஏன்? என்று நாடு முழுவதும் கேள்வி எழுந்துள்ளது. மேலும் கருப்பு பணத்தை மீட்டு நாட்டிலுள்ள ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற தவறிவிட்டனர்.
கருப்பு பணத்தை மீட்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கை கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும், போதைப் பொருள் மாபியாக்களுக்கும் தான் உதவும்.
ஏழை மக்கள் திருடும் போது கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். சாப்பிட உணவு இல்லாமல் ரொட்டியை திருடுபவர்கள் தாக்கப்படுகிறார்கள். நாட்டில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் திருடியவர்களை நாட்டை விட்டு தப்பிக்க அனுமதிக்கிறீர்கள்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.
முன்னதாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விஜய் மல்லையா விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட முயன்றனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.