ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வரவேற்க முடியாது: விஜயகாந்த் கண்டனம்
மக்களின் எதிர்ப்புகளை மீறி தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எந்தவொரு திட்டமும் மக்களுக்காகத்தான் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அவர்களது கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது அல்ல.
குறிப்பாக கெயில் திட்டம், கூடங்குளம் அணுமின் திட்டம் போன்றவை அச்சமூட்டக்கூடிய திட்டம் என்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம் என்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கருதுவதால் அவர்களின் அனுமதி பெற்றால் மட்டுமே அவை வரவேற்புக்குரியதாக அமையும்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற திட்டங்களை மற்ற மாநிலங்களில் கொண்டுவர மறுப்பது ஏன்?
இந்த திட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை வெளிப்படையாக அறிவித்து சரியான திட்டம்தான் என சந்தேகமின்றி நிரூபித்து அதனை மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது போன்ற திட்டங்களை தேமுதிக ஆதரிக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் கருத்தை அறிந்த பிறகு திட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் அனில் மாதவ் தாவே தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் 3 , 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவ்வாறு தொடங்கியிருந்தால் அதனை செயல்படுத்தாமல் உடனடியாக பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றனர். கடன் தொல்லையாலும் தண்ணீர் இன்றி வறட்சியாலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மேலும் அவர்களை பாதிப்பு அடையாமல் செய்ய ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைத்து விவசாயிகளை காப்பாற்றுவது நமது கடமையாகும்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.