ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்திற்கு இன்று கையெழுத்துப் போடுகிறது மத்திய அரசு.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் வகையில் மத்திய பெட்ரோலியத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது. இதற்கு 4 பொதுத்துறை நிறுவனங்களும், 17 தனியார் நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டன.
நெடுவாசல், காரைக்காலை தவிர்த்து அசாமில் 9 இடங்கள், குஜராத் 5, ஆந்திரா 4, ராஜஸ்தான் 2, மும்பை கடல் பகுதி 6, மத்திய பிரதேசம் 1, கட்ச் கடல்பகுதி 1, கிருஷ்ணா-கோதாவரி நதிப்படுகை 1 ஆகிய இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது. இதற்கு மத்திய மந்திரிசபை கடந்த 15-ந் தேதி ஒப்புதல் அளித்தது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு 20 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் மத்திய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாது என மாநில அரசும் உறுதி அளித்தது.
எனவே இந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் நெடுவாசல் போராட்டக்குழுவினர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ஒரு பக்கம் மக்களிடையில் பேசும்போது “பொதுமக்கள் எதிர்க்கிறார்கள் எனில் எந்தக் காரணத்தைக்கொண்டும் அந்தத் திட்டத்தைக் கொண்டுவரமாட்டோம்” என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் அந்தத் திட்டம் கொண்டுவருவதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது மத்திய அரசு.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேசிய பெட்ரோலிய மந்திரி, இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டியது தமிழக அரசுதான் எனவும், மாநில அரசு எடுக்கும் முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் உறுதி அளித்தார்.
இந்த நிலையில் நெடுவாசல் உள்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான முதற்கட்ட ஒப்பந்தம் இன்று (திங்கட்கிழமை) கையெழுத்தாகிறது. டெல்லி தாஜ் மான்சிங் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில், பெட்ரோலியத்துறை மந்திரி முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்படுகிறது.
10 பொதுத்துறை நிறுவனங்கள், 19 தனியார் நிறுவனங்கள், ஒரு பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு நிறுவனம், ஒரு அன்னிய நாட்டு நிறுவனம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் நெடுவாசல் திட்டத்தை ஜெம் லேபரட்டரிஸ், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
எனினும் இந்த ஒப்பந்தம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கும் முதற்கட்ட கையெழுத்துதான் என்றும், இதில் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட முறையான அனுமதியை தமிழக அரசுதான் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.