‘விரைவில் நலம்பெற்று திரும்புவேன்’ என்று ரசிகர்களுக்கு, நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இரு தினங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் குணமடைந்து வருகிறார். இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் இருந்து ரசிகர்களுக்கு, கமல்ஹாசன் நேற்று ஒரு கடிதம் எழுதி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:“என்பால் எப்போதும் என்நிலையிலும் அன்புகாட்டும், என் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம்விரும்பிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி பல”.
எனக்கு சிறு விபத்தோ, ஆபத்தோ ஏற்பட்டால்கூட கேள்விகள் பலவற்றுடன் வீறுகொண்டு எழுந்து என்னை காக்க, எனக்கும் முன்னால் நின்று இவர்கள் காட்டும் அன்பை நான் பார்த்து வியப்பதன்றி வேறென்னை செய்ய. இத்தகைய அன்புக்கு பாத்திரமாக நான் ஒரு தவமும் செய்யவில்லை. பதிலுக்கு அன்பும், என் கலையும், அதை செய்ய நான் ஏற்ற பலபாத்திரங்களும்தான்.
எனக்கு நடக்கும் நல்லதோ, கெட்டதோ உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். வெற்றிகளும், விபத்துகளும் என் கதையில் விசித்திரம் அல்ல. சில இடர்களை கடந்து பலவகை பாடம் கற்றவன். ஆனால், விபத்துகளை கடந்தும், பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இவ்விபத்தே சான்று. ஆயிரம் வேலைகளும், ஆர்ப்பரிக்கும் ரசிகர்களும் எனக்காக காத்திருக்கையில் இந்த விபத்து நேர்ந்திருக்கவேண்டாம்தான். ஆனால், நல்ல மருத்துவர்களும், அவர்களது உதவியாளர்களும், என் சிறு குடும்பமும் உடன் நிற்க, எனக்கு ஒரு குறையும் இல்லாமல் நலம்பெற்று வருவேன்.
‘எப்படி இருக்கீங்க?, எப்ப பார்க்கலாம்? என்ற கேள்விகள் கேட்டு துளைக்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் தம்பிக்கு, அண்ணனுக்கு, அப்பனுக்கு, தலைவனுக்கு என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் பதில் சொல்ல நலம்பெற்று திரும்புவேன். எழுந்து அமர்ந்து இக்கடிதத்தை எழுதினேன்.
விரைவில் நடந்து வந்து நன்றி சொல்லி வணங்குவேன். அன்பிற்கும், பாசத்திற்கும், நன்றிசொல்ல வார்த்தைகள் இல்லா’ உங்கள் அன்பன் கமல்ஹாசன்.
இவ்வாறு கடிதத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.