எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் என்னால் அசத்த முடியும்: லோகேஷ் ராகுல்
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரில் 100, 33, 63 ரன்கள் வீதம் மொத்தம் 196 ரன்கள் குவித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே சதம் அடித்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
24 வயதான கர்நாடகாவைச் சேர்ந்த லோகேஷ் ராகுல் நிருபர்களிடம் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமே நான் சரிப்பட்டு வருவேன் என்று விமர்சித்தனர். பயிற்சியாளர்களோ அல்லது ஓய்வறையில் சக வீரர்களோ, குறிப்பிட்ட வடிவிலான (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) கிரிக்கெட் உங்களுக்கு ஒத்து வராது என்று சொல்லலாம். ஆனால் அவர்களின் எண்ணம் சரியே என்று நான் ஒரு போதும் நினைத்தது கிடையாது. எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படக்கூடிய திறமை எனக்கு உண்டு என்பதை அறிவேன். அதை இப்போது நிரூபித்து காட்டியிருக்கிறேன்.
இளம் வீரர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், இந்த மாதிரியான விஷயங்களை கண்டு கொள்ளாதீர். பயிற்சியாளர் மற்றும் மூத்த வீரர்கள் சொல்வதை நீங்கள் கேட்டு தான் ஆக வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. உங்களது சிறந்த ஆட்டத்துக்கு என்ன தேவை என்பது உங்களுக்கு தான் தெரியும். களத்தில் இறங்கி உங்களது திறமைக்கு ஏற்ப ஆடுங்கள். எப்போது உங்களால் இது முடியாது என்று சொல்கிறார்களோ? அதை தவறு என்று அவர்களுக்கு நிரூபித்து காட்டுங்கள்’ என்றார்.
இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் நாளை (மாலை 4.30 மணி) நடக்கிறது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.