கபாலி படம் தோல்வி என்று வைரமுத்து பேசியதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் விமர்சனம் கிளம்ப தான் பேசியதில் ‘வெற்றி’ என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது என்று வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன்.
கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றபோது,
ஆண் – பெண் – உறவுகள் – இல்லறம் அன்பு – காதல் – கண்ணீர் – அரசியல் – கலை – அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தோல்வி இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன்.
நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.
என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை – நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது. ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.
இந்தச் செய்தி வெளியாவதற்கு முன்பே திரு. ரஜினி சென்னைக்கு வந்த மறுநாள் அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாகப் பேசினார். எங்கள் நட்பு பெரியது; தயவு செய்து யாரும் இதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறினார் வைரமுத்து.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.