கதை பிடித்து இருந்தால் ‘‘பெரிய நடிகர், சிறிய நடிகர் வேறுபாடு பார்க்காமல் நடிப்பேன்’’ நடிகை திரிஷா.
விஜய் சேதுபதியும், திரிஷாவும் முதல் தடவையாக புதிய படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ‘96’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பிரேம்குமார் டைரக்டு செய்கிறார். எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். ‘96’ படத்தின் பூஜையும், தொடக்க விழாவும் சென்னை சாலிகிராமத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை திரிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
கேள்வி:– பெரிய கதாநாயகியான நீங்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறீர்களே?
பதில்:– விஜய் சேதுபதி யதார்த்தமாக நடிக்க கூடியவர். அவர் நடித்துள்ள எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறேன். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
கேள்வி:– இளம் கதாநாயகர்கள் ஜோடியாக தொடர்ந்து நடிப்பீர்களா?
பதில்:– நான் கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். கதை பிடித்து விட்டால் இளம் கதாநாயகன், மூத்த கதாநாயகன் என்று பார்ப்பது இல்லை. உடனே நடிக்க சம்மதித்து விடுவேன்.
சமீபத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 6 படங்களில் நடித்து இருக்கிறேன். அந்த படங்களில் இளம் கதாநாயகர்கள்தான் என்னுடன் நடித்தார்கள். கதையும் எனது கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தால் புதுமுக கதாநாயகன் புதுமுக டைரக்டர்கள் படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.
கேள்வி:– சிவகார்த்திகேயனுடன் எப்போது நடிப்பீர்கள்?
பதில்:– வாய்ப்பும், கதையும் அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் நடிப்பேன். எனக்கு பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற வேறுபாடு கிடையாது. கதைகள் மட்டுமே முக்கியம். தொடர்ந்து இளம் கதாநாயகர்கள் மற்றும் மூத்த கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.