நான் இளைஞனாக இருந்தபோது எவ்வளவு உழைத்தேனோ அதைவிடவும் 100 மடங்கு அதிகமாக உழைக்கிறார் ஸ்டாலின்- கருணாநிதி பெருமிதம்.
சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகே நேற்று மாலை தி.மு.க. பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பிரசார பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து, வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அருகில் உள்ள கடல் இங்கே புகுந்ததோ என்கிற அளவுக்கு வெள்ளம் போல் இங்கே கூடியிருக்கிறீர்கள். கொளத்தூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவர் இன்று மேடைக்கு வரவில்லை. ஊரெல்லாம் சென்று உதய சூரியனுக்கும், கை சின்னத்திற்கும் வாக்கு கேட்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதால் மு.க.ஸ்டாலின் இங்கே இல்லை, அவர் இல்லாவிட்டாலும் அவருக்கு பதிலாக நான் இங்கே இருக்கிறேன்.
ஏனென்றால் இந்த தேர்தலில் பாதி உழைப்பை, பாதி வேலைகளை தன் மீது இழுத்து போட்டுக்கொண்டு அல்லும் பகலும் உழைத்துக்கொண்டு இருக்கிறார், ஸ்டாலின் என் மகன் என்பதற்காக சொல்லவில்லை. மகனாக இல்லாவிட்டாலும் தி.மு.க.வின் சாதாரண தொண்டன் என்ற அளவில் அவர் ஆற்றும் பணி என்னையே பொறாமை கொள்ள செய்கிறது. என் மகன் மீது எனக்கு பொறாமை வருகிறது என்றால், சிறுவயதில் நான் இந்த இயக்கத்திற்காக உழைத்ததை விட 100 மடங்கு மேலாக மு.க.ஸ்டாலின் அந்த பணியை ஆற்றி வருகிறார்.
ஏதோ வந்தோம், சென்றோம் என்று இல்லாமல் இன்றைக்கு தனியார் டி.வி.யில் கூட அவர் கொடுத்த பேட்டியை கூட உன்னிப்பாக கவனித்தேன். அவர் எடுத்து சொன்ன விஷயங்கள் அரசியல் பார்வையில் எப்படி அமைந்து இருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்தேன். அவர் எனக்கு மகனாக பிறந்தது நான் செய்த தவப்புண்ணியம் தான் என்று எண்ணிக்கொள்கிறேன். அப்படிப்பட்ட மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இன்றைக்கு மாலை பத்திரிகையில் ஒரு செய்தி, வெங்கையாநாயுடு என்பவர் ஒன்றை சொல்லியிருக்கிறார். பாராளுமன்றத்தில் அமைச்சராக இருக்க கூடியவர், திராவிட கட்சிகளை குறை கூறி, திராவிட இயக்கம் தமிழகத்தை குட்டி சுவராக்கி விட்டது, இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்கிறது என்று கூறியிருக்கிறார்.
அந்த குட்டி சுவர் நிழலில் படுத்து இருக்கிற வெங்கையாநாயுடு போன்றவர்கள் இப்படி பேசுவது எதற்காக? திராவிட இயக்கம், தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்காமல் இருந்திருந்தால் கடந்த காலத்தில் நடந்த சாதனைகள் எதுவும் நடந்து இருக்காது. இந்தியாவிலேயே முதல் முதல் காவல்துறை ஆணையம் அமைத்தது தி.மு.க. தான். கை ரிக்ஷாவை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கியது தி.மு.க., தான். பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்தது தி.மு.க. தான். இலவச கண் சிகிச்சை செய்ய முகாம் அமைத்து கொடுத்து லட்சக்கணக்கான மக்களுக்கு கண் தானம் செய்தது தி.மு.க. தான். குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து கொடுத்தது தி.மு.க., வெங்கையாநாயுடு அந்த குடிநீரை குடித்து தாகத்தை தீர்த்து விட்டு இப்படி பேசியிருக்கிறார்.
குடிசை மாற்று வாரியம் அமைத்தது, போக்குவரத்தை தேசியமாக்கியது தி.மு.க. தான். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீத இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு, கொடுத்தது தி.மு.க. தான். நபிகள் நாயகம் பிறந்தநாளுக்கு விடுமுறை கொடுத்தது தி.மு.க. தான். சிட்கோ, சிப்காட் ஆகிய அமைப்புகளை தொழில் வளர்ச்சிக்காக உருவாக்கியது தி.மு.க. தான். சொத்தில் பெண்களுக்கு சம பங்கு, திருமண உதவி அளித்தது தி.மு.க. தான். விதவைகளுக்கு மறு திருமண நிதியுதவி வழங்கியது தி.மு.க. தான். சமத்துவபுரம், உழவர்சந்தை திட்டம், 133 அடி உயரத்துக்கு குமரி முனையில் வள்ளுவருக்கு சிலை வடித்தது தி.மு.க. அரசு தான்.
சாலை பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினோம். ஆனால் என்னாச்சு?, மக்கள் நலப்பணியாளர்களை எல்லாம் ஒரே உத்தரவில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இன்றைக்கு அவர்கள் செத்து பிழைத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இரக்கம் காட்டாத அரசு இங்கே செயல்படுகிறது.
சென்னையில் மட்டும் 9 பாலங்கள் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது. பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தொழிலும் வளரவில்லை. தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. மாவட்ட தலைநகரங்களில் புதிய டைட்டல் பார்க் உருவாக்கினோம். அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கியிருக்கிறோம். இந்தியாவிலே அது போன்ற நூலகம் எங்கேயும் கிடையாது. இப்படிப்பட்ட நூலகத்தை மாற்றி, கல்யாணங்களுக்கு விருந்து சாப்பிடும் மக்களை அங்கே அனுப்ப அ.தி.மு.க. அரசு முடிவு எடுத்தது. நாங்கள் வேறு வழியில்லாமல் நீதிமன்றம் சென்று அண்ணா நூலகத்தை யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது என்ற உத்தரவை பெற்றோம். ஆனால் நீதிமன்றத்தை மதிக்காத அரசாக அ.தி.மு.க. செயல்பட்டது. யாருடைய பெயர், அவர்களின் கட்சியின் பெயர் என்ன? அண்ணாவின் பெயரையை கெடுக்க அந்த நூல் நிலையத்தை செயல்படாமல் செய்து விட்டார்கள்.
புதிய தலைமை செயலகத்தை தடுத்தார்கள். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தோம். செம்மொழி பூங்கா அழிக்கப்பட்டது. மெட்ரோ ரெயிலை கொண்டு வந்தோம். மோனோ ரெயில் கொண்டு வருவேன் என்றார் ஜெயலலிதா. மெட்ரோ வந்து விட்டது, மோனோ போய் விட்டது. மெட்ரோ திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால் நாங்கள் மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்துவோம்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன். அதையும் கிடப்பில் போட்டு விட்டார்கள். சமச்சீர் கல்வி எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அதை அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்தார்கள். அவர்களையும் தாண்டி சமச்சீர் கல்வி திட்டம் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினோம். இப்படி எண்ணற்ற திட்டங்களை நாட்டிற்காக, மொழிக்காக, தமிழுக்காக செய்த இயக்கம் தான் தி.மு.க., இனியும் செய்யப்போகும் இயக்கம் தான் தி.மு.க. என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இதை யாரும் தடுக்க முடியாது. இந்த தேர்தலில் உங்கள் அன்பான ஆதரவை, வலிமையான ஆதரவை தி.மு.க.வுக்கு கூட்டணி கட்சிகளுக்கு தரத்தான் போகிறீர்கள், நாம் வரத்தான் போகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.