‘‘நான் எதற்கும் பயப்பட மாட்டேன்’’ நடிகை சுருதிஹாசன்.
இதுகுறித்து சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:–
‘‘முடியாது, நடக்காது என்ற சொல்லே எனது அகராதியில் கிடையாது. சிறுவயதில் இருந்தே உன்னால் இதை செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் அதை வைராக்கியத்தோடு செய்து முடிக்கும் மனோபாவம் எனக்குள் இருக்கிறது. அந்த வேலையை செய்து முடிப்பதுவரை தூங்கவும் மாட்டேன். வளர்ந்த பிறகும் அந்த பழக்கம் என்னை விட்டுப்போகவில்லை.
எதற்கும் பயப்பட மாட்டேன். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு எப்போதும் எனக்குள் உண்டு. ஏதேனும் கஷ்டமான கதாபாத்திரம் வந்தால் இதை நம்மால் செய்ய முடியுமா? என்று தயங்குவது இல்லை. கண்டிப்பாக என்னால் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கைதான் ஏற்படும். கதாநாயகியாக வெற்றி பெற்று விட்டதால் இதை சொல்வதாக நினைக்க கூடாது. சினிமா துறையில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து இப்படித்தான் இருக்கிறேன்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் எதற்காகவும் நான் பயந்தது இல்லை. பள்ளியில் படித்தபோது இசை, பொழுதுபோக்கு விஷயங்களில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. இதனால் வகுப்புகள் தொடங்கிய ஆரம்ப நாட்களில் சரியாக படிக்காமல் அலட்சியமாக இருப்பேன். ஆனால் பரீட்சை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னால் இரவு பகல் பாராமல் கடுமையாக படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி விடுவேன்.
மற்ற மாணவர்களாக இருந்தால் ஆரம்பத்தில் நன்றாக படிக்கவில்லை. இனிமேல் படித்து என்ன மதிப்பெண் எடுக்கப்போகிறோம் என்று நம்பிக்கை இல்லாமல்தான் பேசுவார்கள். நான் அப்படி இல்லை. கடுமையாக உழைக்கலாம். கஷ்டப்படலாம். பலன் தானாக வந்து சேரும். சினிமாவுக்கும் அந்த தைரியத்தில்தான் வந்தேன். எனக்கு இந்த சினிமா உலகம் நிறைய நல்லது செய்து இருக்கிறது’’.
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.