மோடிக்கு எதிராக ஃபேஸ் புக்கில் எழுதிய ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்.
மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் கங்வார். முன்னாள் பிரதமர் நேருவை பேஸ்புக்கில் புகழ்ந்ததற்காக மத்தியப் பிரதேச அரசு இவரை சில தினங்களுக்கு முன்பு பணிமாற்றம் செய்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் அஜய் சிங் கங்வார்.
அஜய் சிங் கங்வார் தனது பேஸ்புக்கில் நாட்டின் முதல் பிரதமர் நேரு பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். அதில் அவர், ‘‘1947-ம் ஆண்டு நம் நாடு இந்து தலிபான்கள் தேசமாக மாறுவதை தடுத்தது நேருவின் தவறா? ஐஐடி, இஸ்ரோ, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், ஐ.ஐ.எம், பெல் போன்ற நிறுவனங்களை உருவாக்கியது அவரது தவறா? ஆசாராம் பாபு, ராம் தேவ் போன்றவர்களை பாராட்டாமல், சாராபாய், ஹோமி ஜஹாங்கீர் போன்ற விஞ்ஞானிகளை பாராட்டியது அவரது தவறா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பவர் இதுபோல் கருத்து தெரிவிப்பது சர்வீஸ் விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி அஜய் சிங் கங்வார் மீது விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், கங்வார் பர்வானி கலெக்டர் பதவியிலிருந்து தலைமை செயலக துணைச் செயலாளர் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அஜய் சிங் கங்வாருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய வேண்டும் என்று பேஸ்புக்கில் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி (நேதாஜி பிறந்தநாள்) கருத்து தெரிவித்திருந்ததாக மத்திய பிரதேச மாநில அரசு நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை கங்வார் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
பேஸ்புக்கில் இதுபோன்று கடந்த ஜனவரி 23-ம் தேதி கருத்து தெரிவித்திருந்தால், ஏன் இவ்வளவு நாட்கள் கழித்து தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். என்னுடைய பேஸ்புக் டைம் லைனில் பிரதமர் மோடிக்கு எதிராக எந்தவொரு பதிவையும் செய்யவில்லை.
இவ்வாறு கங்வார் தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.