16 ஆயிரம் தமிழர்கள் மாயமானது குறித்து விளக்கம் அளிக்கும்படி இலங்கை அரசுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உத்தரவிட்டு இருக்கிறது.
இலங்கையில் தனிஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நடந்து வந்தது. 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் அதிமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தவிர ஆயிரக்கணக்கானவர்களை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில் இலங்கையில், காணாமல் போனவர்கள் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம், நாடு முழுவதும் 14 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டது. அதில், 1989-ம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட்டது.
அப்போது, குறிப்பாக தமிழர் பகுதிகளில் இருந்து மட்டும் 16 ஆயிரம் பேர் காணாமல் போய் இருப்பது கண்டறியப்பட்டது.
தவிர, இதில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 395 குடும்பத்தினரில் 3-ல் ஒரு பங்கினர் காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும், இன்னொரு 3-ல் ஒரு பங்கினர் எங்கோ உயிருடன் இருக்கின்றனர் என நம்புவதாகவும், இதே அளவிலான இன்னொரு பங்கினர் இதுபற்றி உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்து இருக்கின்றனர்.
மாயமானவர்களின் குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது.
இது தொடர்பான 34 பக்க அறிக்கையை அண்மையில், ஜெனீவா நகரில் உள்ள தலைமையகத்திடம் ஆய்வை நடத்திய சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில்தான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்து உள்ளன.
இதையடுத்து, காணாமல் போன 16 ஆயிரம் தமிழர்கள் கதி என்னவாயிற்று என்பது பற்றியும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தும் இலங்கை அரசு பகிரங்கமாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உத்தரவிட்டு உள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.