பூங்கொத்து பெறுவதை நிறுத்தினால் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி மிச்சமாகும்: பிரதமர் மோடிக்கு ம.பி.இளைஞர் யோசனை
இந்தியாவின் 70-வது சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
பிரதமர் தனது உரையின் போது, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். அந்த உரையின் போது என்னென்ன திட்டங்கள் பற்றி மக்களிடம் பேசலாம் என்று பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். பொதுமக்களும் இதுதொடர்பான கருத்துகளை மோடிக்கு அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு நாடெங்கிலும் இருந்து புதிய, புதிய யோசனைகள் வந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு யோசனையும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக உள்ளது.
ஒருவர் தனது மாநிலத்தில் கஷ்டப்படும் தியாகிகளுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் எனவே கஷ்டப்படும் தியாகிகள் பற்றிய விபரத்தை தெளிவாக வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொருவர் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தை போற்றும் திரைப்படங்கள் காட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்னொருவர் ‘‘காஷ்மீருக்கு பா.ஜ.க. ரூ.80 ஆயிரம் கோடி திட்டத்தை அறிவித்துள்ளது. அதுபற்றி மத்திய அரசு முழுமையாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதுபோன்று நிறைய யோசனைகள் நாடெங்கிலும் இருந்து மோடிக்கு வந்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையே மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆசிஷ் ஆனந்த் என்ற இளைஞர் அனுப்பிய யோசனையில், ‘‘உங்களுக்கு தினமும் ஏராளமான பூங்கொத்துகள் வழங்கப்படுகிறது. ஒரு பூங்கொத்து விலை சராசரியாக ரூ.500 வரை உள்ளது.
அந்த வகையில் ஆண்டுக்கு நீங்கள் பெறும் பூங்கொத்துகளுக்கு மட்டும் ரூ.1½ கோடி செலவிடுகிறார்கள். நீங்கள் பூங்கொத்து பெறுவதை நிறுத்தினால் ரூ.1½ கோடி மிச்சமாகும்’’ என்று கூறியுள்ளார்.
இத்தகைய யோசனைகள் பற்றி பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.