கூட்டணி சேருவதில் தவறான முடிவெடுத்தால் விஜயகாந்துக்குத்தான் பாதிப்பு ; பழ.கருப்பையா பேட்டி.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தற்போது எந்த கட்சியிலும் சேராமல் உள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:–
நான் அவசரப்பட்டு எந்த கட்சியிலும் சேர முடியாது. தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் முடிவு செய்ய வில்லை.
என்னுடைய ஒரே குறிக்கோள் ஜெயலலிதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான்.
1967–ம் ஆண்டு இருந்த நெருக்கடி தற்போது தமிழ் நாட்டில் இருக்கிறது.
ஜெயலலிதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தனித்து நின்றால் ஜெயலலிதாதான் வெற்றி பெறுவார். மற்ற எல்லோரும் அழிந்து விடுவார்கள்.
மக்கள் நலக்கூட்டணி உள்பட தனித்து நிற்கும் கட்சிகள் வாக்குகளை பிரிப்பதால் அது ஆளும் கட்சிக்குத்தான் சாதகமாக அமையும்.
எனவே அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் பொதுவான கொள்கையை உருவாக்கி அதன் அடிப்படையில் கூட்டணியை உருவாக்க வேண்டும்.
4 சீட், 10 சீட் கூடுதலாக கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணியில் சேராமல் போனால் அதனால் பாதிப்பு எதிர்க்கட்சிகளுக்குத்தான்.
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தவறான முடிவெடுத்தால் முதல் பாதிப்பு அவருக்குத் தான் வரும்.
ஏற்கனவே அவர் அ.தி.மு.க. கட்சியில் பாதிக்கப்பட்டவர். சட்டசபைக்கே செல்ல முடியாத அளவுக்கு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அ.தி.மு.க.வுக்கு சென்ற சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாகும்.
எனவே இந்த முறை வாக்குகள் சிதறாமல் இருக்க விஜயகாந்த் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
ஜெயலலதா வெற்றி பெற்றால் பாதிப்பு கருணாநிதிக்கு அல்ல. விஜயகாந்துக்குதான். எனவே எதிர் அணி வலுப்பட வேண்டும். 4 சீட் கூடுதல் வேண்டும் என்பதற்காக 40 நாள் போராடுவது சரியாகாது.
இவ்வாறு பழ.கருப்பையா கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.