நேஷனல் ஹெரால்டு வழக்கு ஆவணங்களை சுப்பிரமணியன் சுவாமியிடம் அளிக்க தேவையில்லை- டெல்லி ஐகோர்ட்
1938-ம் ஆண்டு தொடங்கபட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடந்த 2008-ம் ஆண்டு முதல் பதிப்பு நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நிர்வகித்து வந்த நிறுவனத்தின் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் ‘யங் இந்தியன்’ எனும் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
‘யங் இந்தியன்’ நிறுவனம் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி பொருளாளர் மோதிலால் வோரா உள்பட 7 பேரை இயக்குனர்களாகக் கொண்டது. இதன் மூலம் சோனியா, ராகுல் உள்ளிட்ட 7 பேரும் நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை முறைகேடாக அபகரித்து கொண்டதாக புகார்கள் எழுந்தது.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி டெல்லி குற்றவியல் கோர்ட்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்துக்கள் மாற்றம் தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் சோனியா, ராகுல் இருவரும் நேஷனல் ஹெரால்டின் சொத்துக்களை முறைகேடாக அபகரித்து இருப்பதாக கூறியிருந்தார்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை சோனியா காந்தியும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் மறுத்துள்ளனர். மேலும் இது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான மத்திய நிதித்துறை உள்ளிட்ட சில துறைகள் மற்றும் மத்திய அமைப்புகளின் ஆவணங்களை அளிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி டெல்லி கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சுப்ரமணியன் சுவாமியிடம் ஆவணங்களை வழங்குமாறு டெல்லி கீழமை நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, சோனியா, ராகுல் ஆகியோரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அரசு ஆவணங்களை கேட்பதற்கு சுப்பிரமணிய சாமிக்கு உரிமை இல்லை என்றும், அவருக்கு ஆவணங்களை அளிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தது. மேலும், ஆவணங்களை வழங்கும்படி உத்தரவிட்ட கீழமை நீதிமன்ற தீர்ப்பையும் ரத்து செய்துள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.