இந்தியாவிலுள்ள எல்லா பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்திலும் திருக்குறளைச் சேர்க்க முயற்சி- தருண் விஜய் எம்.பி அறிவிப்பு.
தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட வட நாட்டு பாரதிய ஜனதா எம்.பி.யான தருண் விஜய், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த சிலை திறப்பு விழா வருகிற 29-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் திருப்பயண யாத்திரை செல்ல தருண் விஜய் எம்.பி. முடிவு செய்தார். இந்த யாத்திரை தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று நடந்தது. இந்த யாத்திரையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் ஹரித்துவாரில் திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலையின் மாதிரி கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக இன்று காலை ரெயில் மூலம் கன்னியாகுமரி வந்த தருண் விஜய் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியா பல்வேறு மாநிலங்களையும், பல்வேறு உணர்வுகளையும் கொண்டிருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வே உயர்ந்து நிற்கிறது. மொழியாலும், கலாசாரத்தாலும் நாம் மாறுபட்டு இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்களே. அதற்கு அடையாளம் தான் திருவள்ளுவர்.
அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கிற உலக பொதுமறையை தந்த திருவள்ளுவரின் சிலையை வருகிற 29-ந் தேதி ஹரித்துவாரில் கங்கை கரையோரத்தில் திறக்க உள்ளோம். இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து ஹரித்துவார் வரை திருவள்ளுவர் சிலை மாதிரி சிலையை என்னுடன் எடுத்துக் கொண்டு கங்கையை நோக்கி பயணத்தை தொடங்குகிறேன்.
திருவள்ளுர் – கங்கை பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி ஆகியோர் ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் திருக்குறளை சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇராணி ஈடுபட்டுள்ளார்.
திருவள்ளுவர்- கங்கை பயணம் மற்றும் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா என்ற உணர்வை விஞ்சி நிற்கும் வகையில் புனித தலங்களான கன்னியாகுமரியையும், கங்கையையும் இணைக்கும் புதிய நட்பு பாலமாக உருவாவதற்கு இந்த பயணம் அமையும்.
ஹரித்துவாரில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.