சுதந்திர தின நிகழ்சியாக 24 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக தேசியத் தலைவர்களை வரைந்து சாதனை புரிந்த ஓவிய ஆசிரியர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டி பட்டினத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது55). இவர் கோட்டூர் மலையாண்டி பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
நாட்டின் 70-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் விதத்திலும், தேச தலைவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து 24 மணிநேரம் ஓவியம் வரையும் சாதனையை சின்னச்சாமி தொடங்கினார்.
பொள்ளாச்சி அடுத்த நா.மூ.சுங்கம் ராமுகலை அறிவியல் கல்லூரியில் தொடங்கிய ஓவிய சாதனை நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி, பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜர், ராதாகிருஷ்ணன், பெரியார் போன்ற தேச தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்து வருகிறார்.
இதுபற்றி ஓவியர் சின்னச்சாமி கூறும் போது, ’’தற்போதுள்ள புதிய தலைமுறைக்கும், மாணவர்களுக்கும் நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும், சினிமா, செல்போன் மோகம் போன்றவற்றில் இருந்து விடுபடவும், சமூகம் குறித்த எண்ணத்தை மனதில் பதிய வைக்கவும் இந்த ஓவியம் வரையும் நிகழ்ச்சியை செய்துவருகிறேன். 24 மணி நேரத்தில் 20 முதல் 25 ஓவியம் வரை வரைய முடியும்’’ என்றார்.
இந்த ஓவிய சாதனை நிகழ்ச்சியை ஓவிய ஆசிரியர் சின்னசாமி இன்று காலை 10.30 மணிக்கு நிறைவு செய்தார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.