இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க 70 ஆயிரம் நீதிபதிகள் தேவை: நீதிபதி டி.எஸ்.தாகூர்
இந்தியாவில் மக்கள்தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் போதுமான அளவில் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில், பிரதமர் மோடி முன்னிலையில் கண்கலங்கியிருந்த தலைமை நீதிபதி தற்போது இதனை மீண்டும் வலுவாக நினைவுபடுத்தியிருக்கிறார்.
ஐகோர்ட்டு சர்க்கியூட் பெஞ்ச் 100-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் பேசியவை பின்வருமாறு:-
ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான 170 புதிய வரைமுறைகளை மத்திய அரசு இன்னும் நிலுவையில் வைத்திருக்கிறது. அண்மையில் இதுகுறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு நீதி மறுக்கப்படக் கூடாது. மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசின் தலையாய கடமை. நீதிபதிகள் பற்றாக்குறையாக இருப்பது இந்திய நீதித்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு ஐகோர்ட்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ள 900 நீதிபதி பணியிடங்களில் 450 பணியிடங்கள் உடனடியாக நிரப்பட வேண்டியவை. 1987-ல் இந்திய சட்டக் கமிஷன் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க 44 ஆயிரம் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இன்றைக்கு 18 ஆயிரம் நீதிபதிகள்தான் இருக்கிறார்கள்.
மக்கள்தொகை இத்தனை ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில் தற்போது நம் நாட்டில் 70 ஆயிரம் நீதிபதிகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.