இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் ;20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி.

Indian batsman Shikhar Dhawan hits a six against Sri Lanka during the second T20 match of a three match series between the two countries, in Ranchi, India, Friday, Feb. 12, 2016. (AP Photo/Saurabh Das)
இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்றிரவு அரங்கேறியது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் டிக்வெலாவுக்கு பதிலாக தில்ஷன் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சன்டிமால் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார்.
இதையடுத்து இந்தியாவின் இன்னிங்சை பவுண்டரியுடன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் கூட்டணி தொடங்கியது. இருவரும் சிரமமின்றி இலங்கை பந்து வீச்சை நொறுக்கினர். புனே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சொர்க்கம் என்றால், இது பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது. ஆடுகளம் (பிட்ச்) வறண்டு, பிளவுகளாகவும், அவுட் பீல்டு மணல் பரப்புகளாகவும் காட்சி அளித்தது. திசரா பெரேரா, செனநாயக்கே ஓவர்களில் தவான் சர்வசாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். முந்தைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ‘கிலி’ ஏற்படுத்திய கசுன் ரஜிதாவின் ஓவரில் தவான் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.
அதிரடியில் மிரட்டிய தவான் 22 பந்துகளில் தனது முதலாவது அரைசதத்தை ருசித்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய தரப்பில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 5-வது அரைசதமாகவும் இது அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. வேகப்பந்து வீச்சாளர் சமீரா வீசிய கொஞ்சம் எழும்பிச் சென்ற பந்தில் தவான் (51 ரன், 25 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட் கீப்பர் சன்டிமாலிடம் கேட்ச் ஆனார். அடுத்து ரஹானே இறங்கினார். தவானின் வெளியேற்றத்துக்கு பிறகு இந்தியாவின் ரன்வேகம் சற்று தளர்ந்தது. 11-வது ஓவரில் இந்தியா 100 ரன்களை தொட்டது.
மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 43 ரன்களில் (36 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) சமீராவின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். இந்த கேட்ச்சை சமீரா பாய்ந்து பிடித்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது. சிறிது நேரத்தில் ரஹானேவும்(25 ரன், 21 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.
இதன் பின்னர் சுரேஷ் ரெய்னாவும், ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யாவும் ஜோடி சேர்ந்தனர். சிறிது நேரமே களத்தில் நின்றாலும் இலங்கை பந்து வீச்சை இருவரும் பின்னியெடுத்தனர். செனநாயக்கேவின் சுழலில் பாண்ட்யா அடுத்தடுத்து இரண்டு சிக்சர் பறக்க விட்டார். இதே போல் சமீராவின் ஒரே ஓவரில் ரெய்னா 4 பவுண்டரிகளை ஓட விட்டு அமர்க்களப்படுத்தினார். ஆனால் கடைசி இரு ஓவர்களில் சொதப்பியதால் இந்திய அணி 200 ரன்களை தொட முடியாமல் போய்விட்டது.
இலங்கை பவுலர் திசரா பெரேரா 19-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா (27 ரன், 12 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), சுரேஷ் ரெய்னா (30 ரன், 19 பந்து, 5 பவுண்டரி), யுவராஜ்சிங் (0) ஆகியோரை வரிசையாக வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதற்கிடையே, சொந்த ஊரில் களம் கண்ட கேப்டன் டோனி கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. டோனி 9 ரன்னுடன் (5 பந்து, ஒரு பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார்.
அடுத்து இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடியது. முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். முதல் பந்தை வைடாக வீசிய அஸ்வின், மீண்டும் முதல் பந்தை வீசிய போது இலங்கை தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன் (0) சிக்கினார். அவரை விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் செய்தார். இந்த வீழ்ச்சியில் இருந்து இலங்கை அணியினரால் நிமிரவே முடியவில்லை. இடையில் இளம் வீரர் தசுன் ஷனகா 3 சிக்சர்கள் விளாசியது மட்டுமே அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆகும்.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய இலங்கை அணியால் 9 விக்கெட்டுக்கு 127 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
-ரயன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.