டாக்கா ஓட்டல் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய பெண்ணின் உடல் நாளை டெல்லி கொண்டு வரப்படும்: சுஷ்மா தகவல்
வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல ஓட்டலுக்குள் நேற்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் பலியானதாக தெரியவந்துள்ளது.
டாக்காவில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற தருஷி ஜெயின்(19) என்ற இளம்பெண் இந்த தாக்குதலில் பலியாகி இருப்பதாக வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் மூலம் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.
டாக்காவில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற தருஷி ஜெயின், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவரது தந்தை சுமார் 20 ஆண்டுகளாக வங்காளதேசத்தில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். விடுமுறைக்காக வங்காளதேசத்துக்கு வந்தபோது, டாக்கா ஓட்டலில் நேற்று தீவிரவாதிகளின் வெறியாட்டத்துக்கு தருஷி பலியானார்.
இந்நிலையில், வங்காளதேசத்தில் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட சில நடைமுறைகளை பூர்த்தி செய்த பின்னர் தருஷி ஜெயினின் உடல் நாளை (திங்கட்கிழமை) விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதன்பின்னர், அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு தருஷியின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் நகருக்கு எடுத்துச் செல்லப்படும் என சுஷ்மா சுவராஜ் இன்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.