நான் நிச்சயம் வெற்றிபெறுவேன் –நம்பிக்கையுடன் சொல்கிறார் இரோம் ஷர்மிளா.
மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் 38 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.
வாக்குப்பதிவையொட்டி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்னுசூர், ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களிலும் சரசந்த்பூர், கங்பேர்கபி மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி 69 சதவீத வாக்குகள் பதிவாகின. 3 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது.
ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து நீண்டகாலம் உண்ணாவிரதம் இருந்து புதிய அரசியல் கட்சியை துவக்கி உள்ள இரோம் ஷர்மிளாவின் கட்சி 3 இடங்களில் போட்டியிடுகிறது. இரோம் ஷர்மிளா இன்று காலையில் குராய் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபை தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். தங்கள் போராட்டம் வெறும் அடையாள போராட்டம் அல்ல என்று கூறிய அவர், தங்கள் கட்சியானது இளைஞர்கள் மற்றும் மாற்றத்திற்கான கட்சி என்று குறிப்பிட்டார்.
மணிப்பூரில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் அந்த மாற்றத்தை எங்களால் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் ஷர்மிளா தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், இரோம் ஷர்மிளா கட்சியின் வேட்பாளர் எரண்ட்ரோவை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.