தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பதவிப் பறிப்பிற்கு நடிகை குஷ்புவும் காரணமா?
தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்று த.மா.கா.வை தொடங்கிய பிறகு காங்கிரசின் செல்வாக்கு சரிந்துவிடாமல் தடுக்க தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்டார்.
இளங்கோவன் தலைவரான பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றது. நடிகை குஷ்பு காங்கிரசில் இணைந்தார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இளங்கோவனின் அதிரடி அரசியலால் காங்கிரஸ் தொண்டர்கள் த.மா.கா. பக்கம் போகாமல் காங்கிரசிலேயே தக்கவைக்கப்பட்டனர்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்களிடையே உள்ள கோஷ்டி பூசல் இளங்கோவனுக்கு எதிராக திரும்பியது. அவர் காங்கிரசில் உள்ள அனைத்து தலைவர்களையும் அரவணைத்து செல்வதில்லை என புகார் எழுந்தது. பல தலைவர்கள் டெல்லி சென்று இளங்கோவன் மீது புகார் செய்தனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவு இளங்கோவனுக்கு பாதகமாக அமைந்தது. காங்கிரஸ் தோல்வி குறித்து இளங்கோவனை டெல்லிக்கு அழைத்து ராகுல்காந்தி விசாரித்து, வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இளங்கோவன் ராஜினாமா செய்வதற்கு குஷ்பு மீதுள்ள புகாரும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். ஆனால் குஷ்புவின் ஒரு நாள் பிரசாரத்திற்காக வேட்பாளர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்தை அவரது உதவியாளர்கள் என கூறப்படும் சிலர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அறந்தாங்கியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனிடமும் பணம் கேட்கப்பட்டுள்ளது.
இது திருநாவுக்கரசரின் கவனத்துக்கு சென்றதும் அவர் குஷ்பு பிரசாரம் செய்ய தேவையில்லை என்று கூறியுள்ளார். எனவே குஷ்பு அறந்தாங்கியில் பிரசாரம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்காணிக்கத் தவறியதாகவும் இளங்கோவன் மீது புகார் எழுந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பு இளங்கோவன் மீது கோஷ்டி தலைவர்கள் டெல்லி சென்று புகார் செய்தபோது அவரை குஷ்பு காப்பாற்றியதாக தெரிகிறது. ஆனால் தற்போது குஷ்புவே புகாருக்கு உள்ளாகி இருப்பதால் இளங்கோவன் ராஜினாமாவுக்கு அதுவும் ஒரு காரணம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.