முத்துக்கிருஷ்ணன் இன்னொரு ரோஹித் வெமுலாவாக பலியாக்கப்பட்டிருக்கிறாரோ? திருநாவுக்கரசர் சந்தேகம்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவராக உயர்கல்வி பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் திடீரென மரணமடைந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணம் குறித்து அவரது தந்தை கருத்து கூறும் போது, தமது மகன் தற்கொலை செய்து கொள்கிற அளவுக்கு கோழை அல்ல என்று கூறியதோடு, மரணம் குறித்து உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இவரது கருத்தை அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிட முடியாது.
இந்தப் பின்னணியில் 27 வயது நிரம்பிய தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மையான காரணத்தை வெளிக் கொணர வேண்டும். ஏற்கெனவே ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா என்கிற மாணவர் தற்கொலை செய்து கொண்டது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கடும் போராட்டமாக வெடித்தது. தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் இன்னொரு ரோஹித் வெமுலாவாக பலியாக்கப்பட்டிருக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்லியில் படிக்கிற வெளி மாநில மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆய்வு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்தினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.