தேமுதிகவை சீரழித்தது பிரேமலதாதான்- சந்திரகுமார் பேச்சு.
ஈரோட்டில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து 29ம் தேதி பிரச்சாரம் செய்த பிரேமலதா, கட்சியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளாரான சந்திரகுமாரை கடுமையாக சாடி பேசினார். அவரது பேச்சில் சந்திரகுமாரை குள்ளநரி, துரோகி என்றும், முதுகில் குத்துவிட்டார் என்றும் பேசியிருந்தார்.
அதற்கு சந்திரகுமார் பதில் கூறும்போது, தேமுதிக என்பது கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. கட்சியில் கேப்டனின் மனைவியான அண்ணியார் தலையீடு வந்ததில் இருந்தே, கேப்டன் கட்டுப்பாட்டில் இருந்து கட்சி சென்றுவிட்டது. சுயநல நோக்கோடு லட்சக்கணக்கான தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வைகோவின் பேச்சை நம்பி கட்சியை அடகு வைத்தவர்தான் அண்ணி பிரேமலதா. தொண்டர்களின் அனைவரின் கருத்து திமுகவோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் சுய லாபத்துக்காக கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் பல்வேறு தரப்பட்ட நபர்களிடம் நடந்த ரகசிய சந்திப்பின் பின்னணியில் பெரும் பலனடைந்த பிறகு கட்சியை மக்கள் நலக் கூட்டணி என்ற கரைசேராத கட்டுமரத்தில் கட்டிவிட்டார் அண்ணி பிரேமலதா. 30 ஆண்டு காலமாக கேப்டன் ரசிகராக கட்சியின் நிர்வாகிகளாக தொண்டர்களாக உழைத்தவர்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டு பலன் பெற்றது யார். அப்படி பலன் பெற்றவர்கள்தான் துரோகிகள். கட்சியை வைகோவிடம் அடகு வைத்தவர்கள்தான் துரோகிகள். உழைத்த தொண்டர்களை தெருவில் நிறுத்தியவர்கள்தான் முதுகில் குத்தியவர்கள். இப்போதும் நான் தேமுதிகவின் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மதிப்பளித்துதான் திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளேன். பெட்டி பெட்டியாக பணம் வாங்கியதும், கொள்ளையடித்ததும், கொள்ளை களவானிகளோடு ரகசிய கூட்டு வைத்திருப்பதும் அவர்களது மனசாட்சிக்கு தெரியும். காலம் உறுதியாக தண்டனை கொடுக்கும். தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். தேமுதிக தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவில் மக்கள் தேமுதிக வேட்பாளர்கள் 3 பேரும் அமோகமாக வெற்றி பெறுவோம் என கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.