விளையாடும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் – கிரிக்கெட் வாரியம் கண்டிப்பு. ஆஸ்திரேலிய வீரர்கள் ஒப்புதல்.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் பந்து தலையின் பின்பகுதியில் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் யூக்ஸ் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்தார். தரம் குறைந்த ஹெல்மெட் அணிந்து இருந்ததும் அவரது சாவுக்கு காரணமாகும் என்று குற்றம் சாட்டப்பட்டது.
கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 25 வயதான பிலிப் யூக்ஸ் மரணம் நடந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு கமிட்டி அமைத்து இருந்தது. அந்த கமிட்டி தனது விசாரணை அறிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் தாக்கல் செய்து உள்ளது.
விசாரணை கமிட்டி அறிக்கையில் பிலிப் யூக்ஸ் பலிக்கு ‘ஹெல்மெட்’ தரம் காரணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டும் தரம் உயர்ந்த ‘ஹெல்மெட்’ அணிந்து இருந்தாலும் அவரது உயிருக்கு பாதுகாப்பு கிடைத்து இருக்கும் என்று சொல்ல முடியாது. அவரை பந்து தாக்கிய இடம் கழுத்து பகுதியாகும். அந்த பகுதியை தற்போதைய ஹெல்மெட்டால் பாதுகாக்க முடியாது.
ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆனது தான் உயிர் இழப்புக்கு காரணம் என்று சொல்ல முடியாது. ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனாலும் அந்த நேரத்தில் அவர் முறையாக கவனிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தாக்கமே அவரது சோக முடிவுக்கு காரணம் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த அறிக்கை யூக்சை மீண்டும் நமக்கு கொண்டு வந்து விடாது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவரை நேசித்தவர்களின் வலியை குறைத்து விடாது. இருப்பினும் இதேபோல் சம்பவம் மீண்டும் நடந்து விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. வீரர்கள் பாதுகாப்பு கவசங்களை அதிகம் பயன்படுத்தும் படி நாங்கள் சொல்லி இருக்கிறோம். வீரர்களுக்கான பாதுகாப்பு தரத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும். போட்டியின் போது வீரர்கள் காயம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
உள்ளூர் ஆட்டம் மற்றும் பயிற்சி உள்பட எல்லா போட்டிகளிலும் வேகப்பந்து மற்றும் மித வேகப்பந்து வீச்சை எதிர்கொள்கையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிந்து தான் விளையாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் மற்றும் சிலிப்பில் பீல்டிங் செய்யும் வீரர்களும் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். உயர்தர ‘ஹெல்மெட்’ பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட அறிக்கையில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.