ஜெயலலிதா நல்ல டாக்டர்களைப் பரிசீலிப்பது நல்லது- ஜெயலலிதாவின் பேச்சுக்கு கருணாநிதி பதில்.
கச்சத் தீவை நான் தாரை வார்த்து விட்டதாகச் சொல்லும் ஜெயலலிதா, “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரிய வில்லை” என்று கூறியது உண்டா இல்லையா? “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பிரதமர் நரசிம்மராவுக்கு ஜெயலலிதா எழுதியது உண்டா இல்லையா? “கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்று பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியது உண்டா இல்லையா? என்றெல்லாம் நான் கேட்ட கேள்வி களுக்கு முதலில் பதில் சொல்ல வேண்டாமா? எங்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பதை எங்கள் கட்சியிலே உள்ள உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அது புரியவில்லை என்றால், அவர் நல்ல மருத்துவர்களை உடனடியாக நாடுவதே நல்லது என்று கலைஞர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால்…. என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத் தீவு பற்றி எவ்விதத் தேவையோ, அடிப்படையோ இல்லாமல் மீண்டும் தமிழகச் சட்டப்பேரவையில் எனக்குக் கேள்வி எழுப்பியிருக்கிறார். சாதாரணமாக அமைச்சர்களை நோக்கித்தான் பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் ஜெயலலிதா என்னிடம் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்கிறார். நான் இரண்டு பக்கங்களுக்கு முரசொலியில் கச்சத் தீவு பற்றி விரிவாக விளக்கங்களை அளித்த பிறகும், அதில் ஜெயலலிதா எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதை நியாயப்படுத்திக் குறிப்பிட்டது பற்றிச் சுட்டிக்காட்டிய பிறகும் அதைப் படிக்காமல் என்னிடமே கேள்வி கேட்கிறார். பேரவையில் என்னுடைய விளக்கங்களைப் படித்துக் காட்ட முன் வந்த தம்பி துரைமுருகனையும் பேசுவதற்கு அனுமதிக்காமல் ஜெயலலிதா, அவருக்கு எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்திருக்கிறார். அவர் கேட்டுள்ள கேள்விகளுக்கான விளக்கத்தை என்னுடைய உடன்பிறப்புகளுக்கான நீண்ட மடலில் அளித்து விட்டேன். அளித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பிரதமர்கள் நரசிம்மராவுக்கும், வாஜ்பாய்க் கும் எழுதிய கடிதங்களில் அவரைக் காட்டிக் கொடுப்பதாக உள்ள வாசகங்களை அப்படியே ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டு, அதற்கு விளக்கம் கேட்டிருந்தேனே, அதற்கு முதலமைச்சர் ஜெய லலிதா பேரவையில் விளக்கம் அளித்திருக்க வேண்டாமா? அதற்கு விளக்கமளிக்காமல், வினாக்களை மட்டும் தொடுத்துக் கொண்டிருந்தால், அவரிடம் விளக்கமளிக்க வேறெதுவும் இல்லை என்றுதானே பொருள்?
எனவே ஜெயலலிதா தமிழக மீனவர்கள் தினமும் அனுபவித்து வரும் வாழ்வாதாரப் பிரச்சி னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு, திட்டமிட்டு இந்தக் கச்சத் தீவுப் பிரச்சினையில் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரே தவிர வேறல்ல. நானும் ஒவ்வொரு முறை அவர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகின்ற நேரத்திலும் விளக்கம் அளித்திருக்கிறேன். ஆனால் அந்த விளக்கம் எதையும் அவர் படிப்பதில்லையோ அல்லது படித்தும் புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்தும் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக இப்படிப் பேசுகிறாரோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது.
மேலும் நேற்றையதினம் சட்டப்பேரவையில் பேசும்போது, கருணாநிதி தனது பதிலை சட்ட சபைக்கு வந்து சொல்லட்டும் என்றும், கழக உறுப்பினர்களைப் பார்த்து, உங்கள் தலைவர், தலைவர் தானா அல்லது இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர்தான் உங்கள் தலைவரா என்றெல்லாம் கேட்டு, புலனாய்வுத் துறை மூலமாகவும், தனக்குச் சாமரம் வீசும் சில ஏடுகளின் வாயிலாகவும் “சிண்டு முடியும்” வேலையில் ஈடுபட்டு, அதிலே படுதோல்வி அடைந்த காரணத்தால், தற்போது பேரவையிலேயே முதலமைச்சர் பொறுப் பிலேதான் இருக்கிறோம் என்பதையே மறந்து விட்டோ, எப்படியோ கொள்ளைப் பணத்தோடும், தேர்தல் ஆணையத்தோடும், காவல் துறை உள்ளிட்ட நிர்வாகத் துறையோடும் பல முனைக் கூட்டணி அமைத்து தேர்தலில் ஒரு சில இடங்களை மக்களின் எண்ண ஓட்டத்திற்கு எதிராகக் கூடுதலாகப் பெற்று முதலமைச்சராக அமர்ந்து விட்டோம் என்ற அடங்காத இறுமாப்பிலோ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். என்னைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, 22ஆம் தேதிய எனது அறிக்கையில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டாமா? அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு அல்லவா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க முன்வந்திருக்க வேண்டும்.
கச்சத் தீவை நான் தாரை வார்த்து விட்டதாகச் சொல்லும் ஜெயலலிதா, “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரிய வில்லை” என்று கூறியது உண்டா இல்லையா? “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பிரதமர் நரசிம்மராவுக்கு ஜெயலலிதா எழுதியது உண்டா இல்லையா? “கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்று பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியது உண்டா இல்லையா? என்றெல்லாம் நான் கேட்ட கேள்வி களுக்கு முதலில் பதில் சொல்ல வேண்டாமா? அது பற்றி வாயையே திறக்காமல், பேரவைக்கு என்னால் வர இயலாத ஓர் இடத்தினை ஒதுக்கி விட்டு, நான் அங்கே வந்து பதில் சொல்ல வேண்டுமென்பது, எந்த அளவுக்கு ஏளனம், கிண்டல், ஏகடியம் என்பதை தமிழ்நாட்டிலே உள்ள நடுநிலையாளர்களும் அரசியல் புரிந் தோரும் நன்றாகவே அறிவார்கள். பட்டுக்கோட் டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுகிறார் ஜெயலலிதா! எங்கள் கட்சிக்கு தலைவர் யார், எங்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பதை எங்கள் கட்சியிலே உள்ள உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அது புரியவில்லை என்றால், அவர் நல்ல மருத்துவர்களை உடனடியாக நாடுவதே நல்லது!
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.